Friday, 1 November 2019

மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத நீங்கள், அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருப்பீர்கள்.

உங்களின் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசிக்கு 10 - ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார்.

பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். விழிப்பு உணர்வு தேவைப்படும் முக்கியமான காலகட்டம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4 ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். குரு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் மாதக்கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் பலவீனங்களை பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஊர் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் பயணங்களால் திணறுவீர்கள். இளையசகோதரர் வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 11 -ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்புவட்டம் விரிவடையும். மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக பார்க்கவேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

வியாபாரத்தை அதிக வட்டிக்குக் கடன் வாங்கி விரிவுபடுத்திக் கொண்டிருக்கவேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தைப் பெருக்குவது நல்லது. பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ, கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோக ஸ்தானமான 10 - ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டியிருக்கும்.

இளம்பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம். எதிர்காலம் பற்றி யோசித்து முடிவெடுங்கள். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

மாணவ, மாணவிகள் அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட பிரிவில் சேர போராட வேண்டியிருக்கும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.

கலைத்துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இந்த குரு மாற்றம் உங்களைச் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உள்ள சித்தர் ஸ்ரீசிதம்பர சுவாமியை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.


No comments:

Post a Comment