Friday, 1 November 2019

எந்த எந்த திதிகளில் என்ன என்ன வேலை செய்யலாம்

எந்த எந்த திதிகளில் என்ன என்ன வேலை செய்யலாம்

பிரதமை: வளர்பிறை மற்றும் தேய்பிறை பிரதமை தினம் வாஸ்து காரியங்கள் செய்வதற்கும், திருமணம் செய்வதற்கும் உகந்ததாகும். அக்னி சம்பந்தமான காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளை மேற்கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை அக்னி.

துவிதியை: அரசு காரியங்கள் ஆரம்பிக்கலாம். திருமணம் செய்யலாம். ஆடை, அணிமணிகள் அணியலாம். விரதம்  இருக்கலாம். தேவதை பிரதிஷ்டை செய்யலாம். கட்டட அடிக்கல் நாட்டலாம். ஸ்திரமான காரியங்களில் ஈடுபடலாம். இந்த திதிக்கு அதிதேவதை பிரம்மன்.
திருதியை: குழந்தைக்கு முதன்முதல் அன்னம் ஊட்டலாம். சங்கீதம் கற்க ஆரம்பிக்கலாம். சீமந்தம் செய்யலாம். சிற்ப காரியங்களில் ஈடுபடலாம். சகல சுப காரியங்களுக்கும் உகந்த திதி இது. அழகுக் கலையில் ஈடுபடலாம். இதன் அதிதேவதை கௌரி (பராசக்தி).

சதுர்த்தி: முற்கால மன்னர்கள் படையெடுப்புக்கு உகந்த நாளாக இதைத் தேர்ந்தெடுப்பார்கள். எதிரிகளை வெல்ல, விஷ சாஸ்திரம், அக்னிப் பயன்பாடு (நெருப்பு சம்பந்தமான காரியங்களை) செய்ய உகந்த திதி இது.  எமதருமனும் விநாயகரும் இந்தத் திதிக்கு அதிதேவதை ஆவார்கள். ஜாதகத்தில்  கேது தோஷம் உள்ளவர்கள், இந்தத் திதி நாளில் (சங்கடஹர சதுர்த்தி) விநாயகரை வழிபடுவதன் மூலம் கேது தோஷம் விலகும்.

பஞ்சமி: எல்லா சுப காரியங்களையும் செய்யலாம். விசேஷமான திதி ஆகும் இது. குறிப்பாக சீமந்தம் செய்ய உகந்த திதியாகச் சொல்லப்பட்டிருக்கிறது. மருந்து உட்கொள்ளலாம். ஆபரேஷன் செய்து கொள்ளலாம். விஷ பயம் நீங்கும். இந்த திதிக்கு நாக தேவதைகள் அதிதேவதை ஆவார்கள். எனவே நாகர் வழிபாட்டுக்கு உகந்த திதி இது. நாக தோஷம் உள்ளவர்கள் இந்தத் திதியில் நாக பிரதிஷ்டை செய்து வேண்டி வழிபட, நாக தோஷம் விலகும். நாக பஞ்சமி விசேஷமானது.

சஷ்டி: சிற்ப, வாஸ்து காரியங்களில் ஈடுபடலாம் ஆபரணம் தயாரிக்கலாம். வாகனம் வாங்கலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம். புதிய பதவிகளை ஏற்றுக் கொள்ளலாம். இந்த திதிக்கு அதிதேவதை கார்த்திகேயன் ஆவார். முருகனை சஷ்டி விரதம் இருந்து வேண்டிக் கொள்பவர்களுக்கு சகல நலன்களும் உண்டாகும். சத்புத்திர பாக்கியம் கிட்டும். சஷ்டி என்றால் ஆறு. ஆறுமுகம் கொண்ட முருகனை வழிபடுவதன் மூலம் நன்மைகள் பெருகும்.

சப்தமி: பயணம் மேற்கொள்ள உகந்த திதி இது. வாகனம் வாங்கலாம். வீடு, தொழிலில் இடமாற்றம் செய்து கொள்ளலாம். திருமணம் செய்து கொள்ளலாம். சங்கீத வாத்தியங்கள் வாங்கலாம். ஆடை, அணிமணிகள் தயாரிக்கலாம். இதன் அதிதேவதை சூரியன். இந்த தினத்தில், ஏழு குதிரைகள் பூட்டிய ரதத்துடன் உள்ள சூரியனை வழிபடுவது சிறப்பாகும்
.
அஷ்டமி: பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். தளவாடம் வாங்கலாம். நடனம் பயிலலாம். ஐந்து முகம் கொண்ட சிவன் (ருத்ரன்) இதற்கு அதிதேவதை ஆவார்.

நவமி: சத்ரு பயம் நீக்கும் திதி இது. கெட்ட விஷயங்களை அழிப்பதற்கான செயல்களை இந்நாளில் துவக்கலாம். இந்த திதிக்கு அம்பிகையே அதிதேவதை ஆவாள்.

தசமி: எல்லா சுப காரியங்களிலும் ஈடுபடலாம். மதச் சடங்குகளைச் செய்யலாம். ஆன்மிகப்பணிகளுக்கு உகந்த நாளிது. பயணம் மேற்கொள்ளலாம். கிரகப்பிரவேசம் செய்யலாம். வாகனம் பழகலாம். அரசு காரியங்களில் ஈடுபடலாம். இந்தத் திதிக்கு எமதருமனே அதிதேவதை.

ஏகாதசி: விரதம் இருக்கலாம். திருமணம் செய்யலாம். புண்ணுக்கு சிகிச்சை செய்து கொள்ளலாம். சிற்ப காரியம், தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். இதற்கு, ருத்ரன் அதிதேவதை ஆவார்.

துவாதசி: மதச்சடங்குகளில் ஈடுபடலாம். அதிதேவதை விஷ்ணு ஆவார்.
திரயோதசி: சிவ வழிபாடு செய்வது விசேஷம். பயணம் மேற்கொள்ளலாம். புத்தாடை அணியலாம். எதிர்ப்புக்கள் விலகும். தெய்வ காரியங்களில் ஈடுபடலாம். புதியவர்களை நண்பர்களாக்கிக் கொள்ளலாம். கேளிக்கைகளில் ஈடுபடலாம்.

சதுர்த்தசி: ஆயுதங்கள் உருவாக்கவும், மந்திரம் பயில்வதற்கும் உகந்த நாள் இது. காளி இந்த திதிக்கு அதிதேவதை ஆவாள்.

பௌர்ணமி: ஹோம, சிற்ப, மங்கல காரியங்களில் ஈடுபடலாம். விரதம் மேற்கொள்ளலாம். இந்த நாளுக்கு பராசக்தி அதிதேவதை ஆவாள்.

அமாவாசை: பித்ருக்களுக்கு ஆற்றவேண்டிய கடன்களை, வழிபாடுகளை செய்யலாம். தான- தர்ம காரியங்களுக்கு உகந்த நாள். ஈடுபடலாம். 
இயந்திரப்பணிகள் மேற்கொள்ளலாம். சிவன், சக்தி அதிதேவதை ஆவார்கள்.

திதிகளில் வளர்பிறை துவிதியை, திருதியை, பஞ்சமி, சப்தமி, தசமி, ஏகாதசி, துவாதசி, திரயோதசி ஆகியவை விசேஷமானவை. தேய்பிறையில் துவிதியை, திருதியை, பஞ்சமி மூன்றும் சிறப்பான சுப திதிகள் ஆகும். சுப காரியங்களில் ஈடுபடலாம்

பல்லாயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே மகரிஷிகளாலும், யோகிகளாலும், தபஸ்விகளாலும் கண்டுணர்ந்து சொல்லப்பட்ட பொக்கிஷம்- ஜோதிட சாஸ்திரம். 'பழையன கழிதலும் புதியன புகுதலும் வழுவல கால வகையினானே’ என்பதற்கு இணங்க, ஜோதிடத்தை அடிப்படையாகக் கொண்டு புதுப் புது சித்தாந்தங்கள் சொல்லப்பட்டாலும், பழங்கால முனிவர்களால் தோற்றுவிக்கப்பட்ட ஜோதிட அடிப்படை நிலை மாறவில்லை. அதை மாற்றவும் முடியாது.

வானில் தோன்றும் நட்சத்திரங்கள் அத்தனையையும் 27 பிரிவுகளாகப் பிரித்து, அவற்றை 12 ராசிகளுக்குள் அடக்கி, நகர்ந்து கொண்டிருக்கும் கோள்களின் நிலையைக் கொண்டே, பூமியில் வாழும் மனிதர்கள் மட்டுமின்றி ஏனைய ஜீவராசிகளும், மரம்செடிகொடிகளும், மலைகளும் ஏற்றத்தாழ்வு பெறுகின்றன.

வேதங்களில், அதர்வண வேதத்தில் ஜோதிடமும், மருத்துவமும் சொல்லப்பட்டிருக்கின்றன. வேதத்தின் கண்ணாக ஜோதிடம் விளங்குகிறது. தனிப்பட்ட மனிதனின் வாழ்க்கை எப்படி அமையும் என்பதை மட்டுமல்ல, அவனது வாழ்வில் திருப்பத்தை தரப்போகும் சுப வைபங்களையும் எந்த நாளில் அமையலாம் என்பது குறித்தும் வழிகாட்டுகிறது ஜோதிடம்.
சுப நாள் பார்க்க பஞ்ச அங்கம் பற்றி தெரிந்திருக்க வேண்டும். ஜோதிடம் அறிந்தவரோ அறியாதவரோ எவரானாலும் தினமும் காலையில் அன்றைய தின பஞ்ச அங்கங்களைத் தெரிந்துகொள்வது அவசியமாகும். 

நவக்கிரகங்களின் செயல்களுக்கு, அன்றாட திதி, வார, நட்சத்திர, யோக, கரணங்களே ஆதாரமாக உள்ளன. இந்த பஞ்ச அங்கங்களை அறிந்து கொள்பவர்களுக்கு எல்லாவிதமான நற்குணங்களும் உண்டாகும். விரோதிகள் வலுவிழப்பார்கள். துர் ஸ்வப்னம் (கெட்ட கனவு) மூலம் ஏற்படும் தோஷங்கள் விலகும். கங்கா ஸ்நான பலன் ஸித்திக்கும். கோ தானத்தினால் உண்டாகும் பலன்களுக்கு இணையான சுப பலன்கள் உண்டாகும். நீண்ட ஆயுளும், எல்லாவிதமான வாழ்க்கை வசதிகளும், செல்வச் சேர்க்கையும் உண்டாகும்.

தர்மசாஸ்திரப்படி தினந்தோறும் காலையில் பஞ்சாங்கத்தை எடுத்துப் பார்த்து, அன்றைய திதியைச் சொல்வதால் செல்வம்  கிடைக்கும். வாரத்தை (கிழமை) சொல்வதால் ஆயுள் விருத்தியாகும். நட்சத்திரத்தைச் சொல்வதால் பாபம் விலகும். யோகத்தைச் சொல்வதால் நோய் நீங்கும். கரணத்தைச் சொல்வதால் காரியம் நிறைவேறும். பஞ்ச அங்கங்களைச் சொல்லிவிட்டு (தெரிந்து கொண்டு) அதன் பின்னர் ஸ்நானம் செய்துவிட்டு நித்திய கர்மாக்களை அனுசரிப்பது நல்லது.

பஞ்சாங்கத்தில், குறிப்பிட்ட நாளில் எந்தத் திதி என்று கொடுக்கப்பட்டிருக்கும். அந்தத் திதி எத்தனை நாழிகை, விநாடி வரை அந்நாளில் வியாபித்திருக்கும் என்றும் கொடுக்கப்பட்டிருக்கும்.
திதி- சந்திரனின் நாளாகும். மொத்தம் முப்பது திதிகள் உண்டு. அமாவாசையை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் வளர் பிறை (சுக்லபட்சம்) காலமாகும். பௌர்ணமியை அடுத்து சதுர்த்தசி வரையிலான 15 திதிகள் தேய்பிறை காலமாகும் (கிருஷ்ண பட்சம்).

வளர்பிறை காலத்தில் குறிப்பிட்ட திதியின் அதிதேவதையை வணங்கிவிட்டு சுப காரியங்களைச் செய்வது விசேஷமாகும். தேய் பிறை காலத்தில் சுபகாரியங்கள் செய்வதானால் பஞ்சமிக்குள் செய்வது உத்தமமாகும். தேய்பிறை பஞ்சமி வரையிலும் வளர்பிறை காலம் போல் பலன் உண்டு என்று பெரியோர்கள் சொல்லி வைத்துள்ளார்கள்.

மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


மீனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

உரிமைகளை எப்போதும் விட்டுக்கொடுக்காத நீங்கள், அடுத்தவர்களின் சுதந்திரத்தில் அநாவசியமாகத் தலையிட மாட்டீர்கள். சமயோஜித புத்தியால் எதையும் செய்து முடிக்கும் நீங்கள், எப்போதும் பரபரப்பாக இருப்பீர்கள்.

உங்களின் ராசிக்கு 9 - ம் வீட்டில் அமர்ந்து, தொட்ட காரியங்களையெல்லாம் துலங்க வைத்ததுடன், வி.ஐ.பிகள் மத்தியில் ஒரு அந்தஸ்தையும் பெற்றுத்தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசிக்கு 10 - ம் வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார்.

பத்தாம் இடமென்றால் பதவியைப் பறித்துவிடுவாரே என்றெல்லாம் பதற்றப்படாதீர்கள். ஓரளவு நன்மையே உண்டாகும். சிலருக்கு வெளிநாட்டில், அண்டை மாநிலத்தில் வேலை அமையும். அநாவசியமாக யாருக்காகவும் எந்த உறுதிமொழியும் தர வேண்டாம். ஒரே நாளில் முக்கியமான நான்கைந்து வேலைகளைப் பார்க்கவேண்டி வரும்.

உங்கள் திறமையையும், உழைப்பையும் வேறு சிலர் பயன்படுத்தி முன்னேறுவார்கள். எந்த விஷயங்களையும் நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. முக்கிய கோப்புகளைக் கையாளும்போது அலட்சியம் வேண்டாம். உறவினர்களில் சிலர் மதிக்காமல் போவார்கள். யாரையும் எளிதில் நம்பி ஏமாற வேண்டாம். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள். விழிப்பு உணர்வு தேவைப்படும் முக்கியமான காலகட்டம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 2 - ம் வீட்டைப் பார்ப்பதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். உங்கள் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். குடும்பத்தில் நல்லது நடக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும். சொத்து சேரும். குரு 4 ம் வீட்டைப் பார்ப்பதால் தாயாருடன் இருந்த மனவருத்தம் நீங்கும். கை, கால், முதுகு வலியிலிருந்து தாயார் விடுபடுவார். வீடு கட்ட வங்கிக் கடன் கிடைக்கும். புதிய வீட்டில் குடியேறுவீர்கள்.

கணவன், மனைவி ஒருவருக்கொருவர் மனம் விட்டுப் பேசுவீர்கள். இருவரும் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பீர்கள். நவீன ரக வாகனம், செல்போன் வாங்குவீர்கள். கல்யாண முயற்சிகள் பலிதமாகும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். குரு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் மாதக்கணக்கில் தள்ளிப்போன காரியங்களெல்லாம் நல்லவிதமாக முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் உங்களின் பலவீனங்களை பட்டியலிட்டு அவற்றையெல்லாம் மாற்றிக் கொள்வீர்கள். சில விஷயங்களில் பெருந்தன்மையான முடிவுகள் எடுப்பீர்கள். என்றாலும் அலைச்சலும், செலவினங்களும் வந்து போகும். பயணங்களால் ஆதாயம் உண்டு. ஊர் திருவிழாவை முன்னின்று நடத்துவீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை சேவகாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் பயணங்களால் திணறுவீர்கள். இளையசகோதரர் வகையில் அலைச்சல் இருந்தாலும் ஆதாயமும் உண்டாகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும்.அரசு விவகாரங்களில் எச்சரிக்கையாக இருப்பது நல்லது.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 11 -ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் விலகிச் சென்ற உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் திருப்பித் தருவீர்கள். காணாமல் போன முக்கிய ஆவணங்கள் கிடைக்கும். நட்புவட்டம் விரிவடையும். மாதக் கணக்கில் தடைப்பட்டு வந்த காரியங்களெல்லாம் முடிவடையும். பயணங்களால் புத்துணர்ச்சிப் பெறுவீர்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். கைமாற்றாக வாங்கியிருந்த பணத்தைத் தந்து முடிப்பீர்கள். நீண்ட நாளாகச் செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த சுற்றுலா தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் கடினமான காரியங்களையும் எளிதாக முடிப்பீர்கள். புதிய வாகனம் வாங்குவீர்கள். திருமணம் கூடி வரும். அரசால் ஆதாயம் உண்டு. நீண்ட காலமாக பார்க்கவேண்டுமென்று நினைத்திருந்த நண்பர்கள், உறவினர்களைச் சந்தித்து மகிழ்வீர்கள்.

வியாபாரத்தை அதிக வட்டிக்குக் கடன் வாங்கி விரிவுபடுத்திக் கொண்டிருக்கவேண்டாம். விரலுக்குத் தகுந்த வீக்கம் வேண்டும் என்பார்களே, அதுபோல இருக்கிற வியாபாரத்தைப் பெருக்குவது நல்லது. பழைய வாடிக்கையாளர்களைத் தக்க வைத்துக் கொள்ளுங்கள். பாக்கிகளை வசூலிப்பதில் கடுமை காட்டாதீர்கள். முடிந்த வரை கடன் தருவதை தவிர்க்கப் பாருங்கள். கமிஷன், ரியல் எஸ்டேட், பெட்ரோ, கெமிக்கல், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோக ஸ்தானமான 10 - ம் வீட்டில் குரு அமர்வதால் வேலைச்சுமை இருக்கும். நேரங்காலம் பார்க்காமல் உழைத்தும் எந்தப் பயனும் இல்லையே, என்று அவ்வப்போது ஆதங்கப்படுவீர்கள். விரும்பத்தகாத இடமாற்றங்கள் வரும். வேலையை விட்டுவிடலாமா என்ற எண்ணங்கள் வரக்கூடும். புதிய அதிகாரியால் சில நெருக்கடிகளைச் சந்திக்க நேரிடும். சக ஊழியர்களிடம் அதிக உரிமை எடுத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய அடிப்படை உரிமைக்காக நீங்கள் போராட வேண்டியிருக்கும்.

இளம்பெண்கள் உயர்கல்வியில் கவனம் செலுத்திப் படிக்க வேண்டிய முக்கியமான காலகட்டம். எதிர்காலம் பற்றி யோசித்து முடிவெடுங்கள். எந்த ஒரு முடிவையும் பெற்றோரை கலந்தாலோசிக்காமல் எடுக்காதீர்கள். தடைப்பட்ட திருமணம் கூடி வரும்.

மாணவ, மாணவிகள் அதிகாலையில் எழுந்து படிக்கத் தவறாதீர்கள். விருப்பப்பட்ட பிரிவில் சேர போராட வேண்டியிருக்கும். இயற்பியல், கணக்குப் பாடங்களில் அதிக கவனம் செலுத்தப்பாருங்கள்.

கலைத்துறையினர் சிறிய வாய்ப்புகளாக இருந்தாலும், அலட்சியப்படுத்தாமல் பயன்படுத்துங்கள். புதிய நிறுவனங்களை நம்பி ஏமாற வேண்டாம்.
இந்த குரு மாற்றம் உங்களைச் செம்மைப்படுத்துவதற்கு உதவுவதுடன், சமூகத்தில் வளைந்துகொடுத்துப் போகும் கலையைக் கற்றுத் தருவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருப்போரூர் கந்தசுவாமி கோயிலில் உள்ள சித்தர் ஸ்ரீசிதம்பர சுவாமியை ஞாயிற்றுக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். துப்புரவு பணியாளருக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.


கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


கும்பம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

என் கடன் பணிசெய்து கிடப்பதே என்று காலநேரம் பாராமல் கடினமாக உழைக்கும் நீங்கள், உள்ளுக்குள்ள சக்கரவர்த்தி, ஆனால் உண்மையில் மெழுகுவர்த்தியாய் வாழும் குணமுடையவர்கள். அமைதியை விரும்பும் நீங்கள், போட்டியென வந்துவிட்டால் விஸ்வரூபம் எடுத்து மற்றவர்களை மிரள வைப்பீர்கள்.

உங்களின் ராசிக்கு உத்தியோகஸ்தானமான 10 - ம் வீட்டில் அமர்ந்து அடுக்கடுக்கான வேலைச்சுமையையும் மன உளைச்சலையும் தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 11 - ம் வீட்டில் அமர்வதால் இனி நீங்கள் வெளிச்சத்துத்துக்கு வருவீர்கள். குடும்பத்திலிருந்த பிரச்னைகளுக்கெல்லாம் இனி லாப ஸ்தான குரு பகவான் நல்ல தீர்வுகளைத் தருவார்.

கடினமான காரியங்களையும் எளிதாக முடித்து வெற்றிபெறுவீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். கைமாற்றாகவும், கடனாகவும் வாங்கியிருந்த பணத்தையெல்லாம் திருப்பித் தருவீர்கள். பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு கிடைக்கும். பணப்பற்றாக்குறையால் தடைப்பட்டிருந்த வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.

திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அந்நியோன்யம் அதிகரிக்கும். மூத்த சகோதர வகையில் இருந்த மனக்கசப்பு நீங்கும். புதிய வேலைக்கு முயற்சி செய்தவர்களுக்கு நல்ல பதில் வரும். தள்ளிப்போனவர்களுக்கு திருமணம் கூடி வரும்.

புதிய பதவி, பொறுப்புகள் தேடி வரும். தாமதமாகிக்கொண்டிருந்த அரசாங்க விஷயங்களெல்லாம் நல்லவிதத்தில் முடிவடையும். புதிதாக வாகனம் வாங்குவீர்கள். தாயாரின் ஆரோக்கியம் சீராகும். பங்குச் சந்தையில் பணம் வரத் தொடங்கும். அநாவசியச் செலவுகளைக் கட்டுப்படுத்துவீர்கள். தாய்மாமன், அத்தை வழியில் இருந்துவந்த மனஸ்தாபங்கள் விலகும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
உங்களின் ராசிக்கு 3 - ம் வீட்டை குரு பார்ப்பதால் மனோபலம் கூடும். தன்னிச்சையாக, தைரியமாக முடிவுகள் எடுக்கத்தொடங்குவீர்கள். வீடு, மனை வாங்குவது, விற்பது லாபகரமாக முடியும். இளைய சகோதர வகையில் அனுகூலம் உண்டு. டி.வி., ஃப்ரிட்ஜ், வாஷிங் மெஷின் போன்ற சாதனங்கள் வாங்குவீர்கள்.

குரு 5 - ம் வீட்டைப் பார்ப்பதால் மனத்தில் இருந்த குழப்பங்கள் நீங்கி, தெளிவு பிறக்கும். குழந்தை பாக்கியம் உண்டு. மகளுக்கு எதிர்பார்த்த குடும்பத்திலிருந்து நல்ல வரன் அமையும். குடும்பத்தினருடன் குலதெய்வக் கோயிலுக்குச் சென்று நேர்த்திக் கடனை செலுத்துவீர்கள்.

பூர்வீக சொத்துப் பங்கைக் கேட்டு வாங்குவீர்கள். குரு ராசிக்கு 7 - ம் வீட்டைப் பார்ப்பதால் சோர்வு, சலிப்பு நீங்கி உற்சாகமடைவீர்கள். பணவரவு உண்டு. புதிய திட்டங்கள் நிறைவேறும். வி.ஐ.பிகளின் வீட்டு விசேஷங்களில் கலந்துகொள்வீர்கள். மனைவி வழியில் ஆதாயமடைவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், தள்ளிப்போன விஷயங்கள் உடனே முடியும். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். யாருக்கும் சாட்சி கையெழுத்துப் போட வேண்டாம்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் சுகஸ்தானாதிபதியும் பாக்யாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் யோகம், அதிரடி முன்னேற்றம் உண்டாகும். விலை உயர்ந்த நகைகள், செல்போன், லேப் டாப், டேப் வாங்குவீர்கள். தாயார் மற்றும் தாய்வழியில் இருந்துவந்த பிணக்குகள் நீங்கும். விலகியிருந்த மூத்த சகோதரர் விரும்பி வந்து பேசுவார்கள். உங்கள் ரசனைக்கேற்ற வீடு, வாகனம் அமையும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் சப்தமாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் உங்களின் திறமைக்கு அங்கீகாரம் கிடைக்கும். மகளுக்கு நல்ல வரன் அமையும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். கணவன், மனைவிக்கு நெருக்கம் அதிகரிக்கும். மனைவி வழியில் செல்வாக்கு உயரும். புதிய வேலை கிடைக்கும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின்ள் ராசிக்கு 12 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் பயணங்கள் உண்டு. உறவினர்கள், நண்பர்களால் மறைமுக நெருக்கடிகள் வந்து நீங்கும். தூக்கம் குறையும். ஆன்மிகத்தில் நாட்டம் அதிகரிக்கும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் வீடு கட்ட வங்கிகளில் பணம் வாங்கியிருந்தவர்கள் சில தவணைகளைச் செலுத்த முடியாத அளவு பணத்தட்டுப்பாடு ஏற்படும் . முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் பெற்றோரின் ஆரோக்கியத்தில் கூடுதல் கவனம் செலுத்துங்கள். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகள் அதிகமாகும். புதிய முயற்சிகளில் வெற்றி உண்டு. சகோதரர் வகை திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

வியாபாரத்தில் பற்று வரவு உயரும். சந்தை நிலவரத்தைத் தெரிந்து கொண்டு குறைந்த முதலீடு செய்து லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்கள் விரும்பி வருவார்கள். புதிய கிளைகள் தொடங்குவீர்கள். அனுபவமிக்க வேலையாட்களைப் பணியில் அமர்த்துவீர்கள். முக்கிய பிரமுகர்களின் அறிமுகத்தால் வெளிநாட்டு நிறுவனத்தின் ஒப்பந்தம் கிடைக்கும். பங்குச்சந்தை, ஸ்பெக்குலேஷன், இரும்பு, கட்டிட உதிரிப் பாகங்களால் லாபமடைவீர்கள். இயக்கம், சங்கம் நடத்தும் விழாக்களுக்கு முன்னிலை வகிப்பீர்கள்.

உத்தியோகத்தில் சுமுகமான சூழ்நிலை உருவாகும். அலுவலக சூட்சுமங்களைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களை உருக்குலைய வைத்த மேலதிகாரி வேறிடத்துக்கு மாற்றப்படுவார். புதிய மூத்த அதிகாரி உங்களைக் கலந்தாலோசித்து சில முக்கிய முடிவுகள் எடுப்பார். சக ஊழியர்களிடையே உங்களின் சிந்தனைக்குப் பாராட்டுகள் கிடைக்கும். தள்ளிப்போன பதவியுயர்வு, சம்பள உயர்வு இனி தடையில்லாமல் கிடைக்கும். தலைமைப் பொறுப்பு தேடி வரும். வெளிநாட்டு நிறுவனங்களிலிருந்து அதிக சம்பளத்துடன் கூடிய அழைப்பு வரும்.

மாணவ, மாணவிகள் ஏனோதானோ என்று படிக்காமல் இனி ஆர்வத்துடன் படிப்பீர்கள். நினைவாற்றல் கூடும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். மதிப்பெண்கள் உயரும். நல்ல நண்பர்கள் அறிமுகமாவார்கள். சக மாணவர்களின் அன்பைப் பெறுவீர்கள்.
பெண்
இளம் பெண்களுக்கு கல்யாணம் கூடி வரும். தடைப்பட்ட உயர் கல்வியைத் தொடர்வீர்கள். புதிய இடத்தில் உத்தியோகம் அமையும். ஆடை, ஆபரணங்கள் சேரும்.பெற்றோர் உங்களின் விருப்பங்களை நிறைவேற்றுவார்கள்.

கலைத்துறையினர் இனி துளிர்த்தெழுந்து வீறுநடை போடுவார்கள். பெரிய நிறுவனங்களின் அழைப்பு உங்களைத் தேடி வரும். பட்டிதொட்டியெங்கும் பாராட்டு கிடைக்கும்.
இந்த குருமாற்றம் பதுங்கியிருந்த உங்களைப் பிரபலமாக்குவதுடன், பண வசதியும் சொத்துச் சேர்க்கையையும் அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், கீழ்படப்பையில் வீற்றிருக்கும் ஸ்ரீசாந்த நாயகி உடனுறை ஸ்ரீவீரட்டேஸ்வரரை பிரதோஷ நாளில் சென்று வணங்குங்கள். மனவளம் குன்றியவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.


மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


மகரம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் சமமாக மதிக்கும் நீங்கள், மற்றவர் மனம்நோகாமல் பேசக்கூடியவர். தடைக்கற்களைப் படிக்கற்களாக்கி முன்னேறும் நீங்கள் ஆரவாரமில்லாமல் எதையும் சாதிப்பீர்கள்.

உங்களின் ராசிக்கு லாப வீட்டில் அமர்ந்து ஓரளவு வசதி வாய்ப்புகள், திடீர் யோகம் மற்றும் பணவரவு தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 12 - ம் வீடான விரய ஸ்தானத்தில் மறைவதால் வேலைச்சுமையும், அலைச்சலும் இருக்கும்.

பிரபலமான புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். பழைய வீட்டை சிலர் இடித்துப் புதுப்பிப்பார்கள். சி.எம்.டி.ஏ., எம்.எம்.டி.ஏ அப்ரூவல் கிடைத்து சிலர் புதிதாக வீடு கட்டத் தொடங்குவார்கள். உறவினர்கள், நண்பர்கள் வீட்டுத் திருமணம், கிரகப் பிரவேசம், காது குத்து போன்ற சுபநிகழ்ச்சிகளை முன்னின்று நடத்துவீர்கள்.

சிக்கனமாக இருக்க வேண்டுமென்று நினைத்தாலும் அத்தியாவசியச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத்தில், கணவன், மனைவிக்குள் வரும் சிறுசிறு பிரச்னைகளை பெரிதுபடுத்த வேண்டாம்.

பிள்ளைகளிடம் அதிக கண்டிப்பு காட்டாதீர்கள். அவர்களது உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் பற்றி திட்டமிடுவீர்கள். மகளுக்கு வரன் தேடும்போது நன்றாக விசாரித்து திருமணம் முடிப்பது நல்லது. மனத்தில் பட்டதை பளிச்சென பேசி மற்றவர்களின் விமர்சனத்துக்கு உள்ளாவீர்கள். புதிய கடன்கள் வாங்கவேண்டாம். சொத்து ஆவணங்கள், பத்திரங்கள் தொலைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளுங்கள். அநவாசியமாக யாரிடமும் வாக்குறுதி தரவேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் சுகஸ்தானத்தைப் பார்ப்பதால் தாயாரின் உடல்நிலை சீராகும். பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள். நல்ல காற்றோட்டம், குடிநீர் உள்ள வீட்டுக்கு மாறுவீர்கள். சிலர் வேறு ஊருக்கு குடிபெயர்வீர்கள்.

குரு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் பழைய கடனில் ஒரு பகுதியை பைசல் செய்ய வழி கிடைக்கும். குரு 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் ஆயுள், ஆரோக்கியம் கூடும். வழக்குகள் சாதகமாகும். பங்குச் சந்தையில் பணம் வரும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் மூல நட்சத்திரத்தில் செல்வதால் ஒரு பக்கம் அலைச்சல் இருந்தாலும் முன்னேற்றம் உண்டு. ஆனால், பணவரவு குறையாது. புகழ், கௌரவம் கூடும். அரசால் ஆதாயம் உண்டு. முக்கிய பதவிகள், பொறுப்புகள் தேடி வரும். சொத்துச் சிக்கல் ஒரு முடிவுக்கு வரும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் பூர்வ புண்ணியாதிபதியும், ஜீவனாதிபதியுமான சுக்கிரனின் பூராட நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் வருமானம் உயரும். குழந்தை பாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பிள்ளைகளின் உயர்கல்வி, உத்தியோகம், திருமணம் தொடர்பான முயற்சிகள் பலிதமாகும். குடும்பத்தினருடன் சென்று குல தெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள். பூர்விகச் சொத்தில் சீர்திருத்தம் செய்வீர்கள்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் அஷ்டமாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால், பயணத்தில் கவனமாக இருங்கள். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்குள்ளேயே அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் பணிச்சுமை இருந்துகொண்டே இருக்கும். வெளியிடங்களில் சாப்பிடுவதைத் தவிர்ப்பது நல்லது. புதிய நபர்களிடம் எச்சரிகையுடன் பழகுங்கள்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உத்திராடம் 1-ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பழைய கடன் பிரச்னை அவ்வப்போது மனத்தை வாட்டும். வீடு, வாகனப் பராமரிப்புச் செலவுகளும் இருக்கும். எந்த ஒரு காரியத்தையும் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் மின்னணு, மின்சாதனங்களைக் கவனமாகக் கையாளுங்கள். கர்ப்பிணிகள் மருத்துவரின் ஆலோசனையின்றி எந்த மருந்தையும் உட்கொள்ள வேண்டாம். பிள்ளைகளால் அலைச்சல், செலவுகள் இருக்கும். அவர்களின் நிறைகளைப் பாராட்டத் தயங்காதீர்கள்.

வியாபாரத்தில் சில புதிய அனுபவங்கள் கிடைக்கும். தேங்கிக் கிடந்த சரக்குகளை தள்ளுபடி விலைக்கு விற்று முடிப்பீர்கள். புதிதாக அறிமுகமாகும் நண்பர்களால் ஆதாயமடைவீர்கள். புகழ்பெற்ற நிறுவனத்துடன் புதிய ஒப்பந்தம் செய்வீர்கள். கடையையும் நவீனமயமாக்குவீர்கள். சங்கத்தில் மறைமுக எதிர்ப்புகள் இருந்தாலும் உங்களுக்கென்று தனி இடம் உண்டு. இரும்பு, உணவு, ரியல் எஸ்டேட், பதிப்பகம், சிமெண்ட் வகைகளில் லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் உங்களின் திறமைகளை வெளிப்படுத்த புதிய வாய்ப்பு கிடைக்கும். ஒரே நேரத்தில் இரண்டு, மூன்று வேலைகளை இழுத்துப்போட்டு பார்க்கவேண்டி வரும். மூத்த அதிகாரிகளுடன் முரண்பாடுகள் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள். சக ஊழியர்களின் ஒத்துழைப்பால் நினைத்ததை முடிப்பீர்கள். பதவி உயர்வை எதிர்பார்க்கலாம்; பழைய சம்பள பாக்கி கைக்கு வரும்.

பெண்கள் பரபரப்பாகக் பயிற்சி வகுப்புகளில் பங்கேற்பார்கள். எதிர்பார்த்தபடி நல்ல இடத்தில் வரன் அமையும். உயர் கல்வியில் விடுபட்ட பாடத்தை எழுதி வெற்றிபெறுவீர்கள். பெற்றோரின் நீண்ட நாள் கனவுகளை நனவாக்குவீர்கள்.

மாணவ, மாணவிகள் விளையாட்டுத்தனத்தைக் குறைத்து வகுப்பறையில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். கணிதம் மற்றும் மொழிப் பாடங்களுக்கு அதிக நேரம் ஒதுக்குங்கள்.

கலைத்துறையினர் விமர்சனங்களை எதிர்கொள்ளவேண்டியிருக்கும். அதையும் தாண்டி முன்னேறுவீர்கள். புதிய பட வாய்ப்புகள் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சுபச்செலவுகளைத் தருவதாகவும் நட்புவட்டத்தை விரிவடையச் செய்வதாகவும் உங்களுக்கு அமையும்.



பரிகாரம்:தஞ்சை மாவட்டம், ஆலங்குடியில் அருள்பாலிக்கும் ஸ்ரீகுருதட்சிணாமூர்த்தியை வியாழக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். பார்வையிழந்தவர்களுக்கு உதவுங்கள். பலம் கூடும்.