Monday 22 February 2016

இறக்கக் கூடாத நட்சத்திரங்கள் எவையெவை?

இறக்கக் கூடாத நட்சத்திரங்கள் எவையெவை?

அவிட்ட அடைப்பு என ஏன் அழைத்தனர்?

குறிப்பிட்ட நட்சத்திரம் மட்டும் இடம்பெறக் காரணம் என்ன?

இதற்குண்டானப் பரிகாரங்கள் என்ன? கொஞ்சம் சிந்திப்போமா?

தனிஷ்டா” என்கிற வடமொழிச் சொல்லுக்கு, “அவிட்ட நட்சத்திரம்” என்றும், “தனிட்டை” என்றும், “பஞ்சமி” என்கிறச் சொல்லுக்கு, “ஐந்து” என்றும், அர்த்தமாகும்.

மேலும், தனிட்டை என்கிறச் சொல்லுக்கு,” அவிட்டநாள்” என்றும், அகராதியில் குறிப்பிடப் பட்டுள்ளது. அவிட்டநாள் என்பதின் இணைச்சொல்லாக, “தனித்திருத்தல்”, என்றும், “உதவியற்றிருத்தல்” என்றும், “தனியாக இருத்தல்” என்றும், “யாரோடும் ஒன்றியாதிருத்தல்”, “தனிமையாக இருத்தல்” என்றும், பல பரிணாமத்தில் ஒரே அர்த்தத்தில் குறிப்பிடப் பட்டுள்ளது.

தனித்திருப்பது என்றால், யார் தனித்திருப்பது? ஒன்றியாதிருப்பது என்றால் யார் ஒன்றாமல் இருப்பது?
ஒருவர் இறந்து கிடந்தால், இந்த உயிரற்ற உடல்தான் நம்மோடு, உறவுகொண்டு ஒன்றி இருக்கமுடியாது. கட்டைப்போல் வேரறுந்து கிடக்கும், இந்த உடம்புதான், நம்மோடு இணைந்து இருக்கமுடியாமல் தனித்திருக்கும் அல்லவா?

இந்த உயிரற்ற உடம்புக்குள் இருந்த ஆத்மா, பூவுலகில் யாரோடும் ஒன்றமுடியாமல்,தனித்து சென்று விடும் என்பதுதான் உண்மை.
தனிஷ்டா என்னும் அவிட்டநாளில் இறந்த ஆத்மாக்கள் குறிப்பிட்ட நாள்கள் வரை, பூமியில் வாழ்வாரோடும், இறைவனின் நிழலில் இளைப்பாராமலும், அலைந்து திரிகின்றன. அவிட்டத்தில் இறந்து அலையும் ஆத்மாக்கள் தாங்கள் நேசித்த, குடும்ப உறுப்பினர்களைத் தங்களோடு இணைத்துக் கொள்ளவே விரும்புகின்றன.

தங்களின் கோபதாபங்களையும், ஆசைகளையும், வெறியையும், வேட்கைகளையும் தனித்துக்கொள்ள, பல இன்னல்களையும், நோய்நொடிகளையும், தொடர் மரணங்களையும், தங்கள் குடும்பத்தினர்க்கே தந்து விடுகின்றன.

அவிட்ட நாள் என்னும் அடைப்பில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் எல்லாம் இது போன்ற கொடுமைகளைச்செய்யும் என்று அர்த்தமில்லை. இதே அடைப்பில் இறந்தவர்களின் ஆத்மாக்கள், எந்த இன்னலும் தராததற்கான உதாரணங்களும் உண்டு.

பெரும்பாலும், அடைப்பில் இறந்தவர்களின் ஆத்மாக்கள் நிம்மதியற்று அலைகின்றன என்றுதான் நம்பப்படுகிறது. நிம்மதியற்று அலையும் ஆத்மாக்கள் தங்களின் ஆசைகளையும், தாபங்களையும் தீர்த்துக்கொள்ள பலகீனமான ஆன்மாவோடு இருப்பவர்களைத் தங்களோடு இணைத்துக் கொண்டு, அந்த உடலை தன்வசமாக்கிவிடும்.

அதன் பின் அந்த உடலில் இருந்து கொண்டே, தன் வெறியையும், தாபங்களையும் ஒவ்வொன்றாகத் தீர்த்துக் கொள்ளும்.
ஒருவன் மரிக்கிறான்.

இதுவரை நாம் பார்த்த அவன் உடல் இங்கே இருக்கிறது. ஆனால், அவனிடன் அசைவில்லை. அவன் உடம்பு அழிவதற்கு ஏதோவொரு வேதியியல் மாற்றம் நிகழ்ந்து கொண்டிருப்பதும் தெரிகிறது. பிறப்பு முதல் இறப்பு வரை அவனுள் இருந்த ஜீவக்காற்று எனும் ஆத்மா இருக்கும் வரை அழியாத உடல், இல்லாதபோது அழிகிறது. அப்படியானால், உடம்புக்குள் இருந்த ஆத்மா, எங்கே போனது.

இதுவரை அவனையும், அவன் வாழ்ந்த விதத்தையும் அறிந்த நம்மால், இனிமேல் அந்த ஆத்மாவின் நிலையை எப்படி அறியமுடியும். இந்த மறைவான பூடகமான நிலையில் தான், அறியாமை தலைத் தூக்குகிறது. சில ஆயிரம் ஆண்டுகளாய் மக்கள் மனதில் திணிக்கப்பட்ட மாயத்திரைகளை, சில ஆண்டுகளில் பகுத்தறிவால் திறந்துவிட முடியாது. மூடநம்பிக்கையின் அடிவேரை அறுத்தெறியும் சக்தி, அறிவாயுதத்தால் தான் முடியும்.
இறப்புக்குப் பிந்திய நிலையில், அத்மாவின் நிலைபற்றி ஆன்மீகத்தில், பல கருத்துக்கள் சொல்லப் பட்டுள்ளன.

ஆனாலும், ஜோதிடமும் வேதத்தின் அங்கம்தான் என்றாலும், இங்கேதான் மக்களின் அறியாமையையும், மூடநம்பிக்கையையும் தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளும் மனோபாவம் அதிகமாக உள்ளது.

எந்த மனிதனும் மரணத்திற்குப் பின் இறைவன் அமைத்துள்ள ஆத்மா விசாரணைக்கான, நீதிமன்றத்தில் நிறுத்தப் படுவான். மனிதன் மனிதக்குற்றங்களை விசாரிக்க பூமியில் அமைத்துள்ள நீதிமன்றங்களைப் போல அல்லாமல், வாத பிரதிவாதங்கள், குறுக்கு விசாரணைகள், மேல் முறையீடுகள், வாய்தாக்கள், வழக்குகளைக் கிடப்பில் போடுவது, பிணைத் தொகையில் வெளியே விடுவது, சிறையில் “ஏ” கிளாஸ், “பி” கிளாஸ் என்று எதுவும் இறைவன் அமைத்துள்ள நீதிமன்றத்தில் கிடையாது.

மனிதனுக்குள் இருந்த ஆத்மா, நாம் வாழ்ந்த வாழ்க்கை முறைகளை, நிறைகுறைகளை, குற்றங்களை, கர்மவினைகளாய் பதிவு செய்து கொள்ளும். இப்படி பதிவு செய்யப்பட்ட கர்மவினைகள் தான், நம்மைப் பற்றி சாட்சி சொல்லிக் கொண்டிருக்கும். அதன் பின் நீதிபதி நியாயம் தீர்ப்பார். தன்னைப் போல, தன் சாயலாய் படைத்த மனிதனுக்காக இறைவன் அமைத்துள்ள நீதிமன்றம் எது தெரியுமா? அதுதான் “தனிஷ்டா பஞ்சமி”!

நம் கர்மவினைகளை இழுத்துச் செல்லப்போகும் பிரதான சாலைகள் எது தெரியுமா? நாம் குறிப்பிடப் போகும் ஐந்து நட்சத்திரப் பாதைகள் தான். நம் கர்ம வினைகளை விசாரணை செய்யப்போகும் மாத அளவுகள் எவ்வளவு தேரியுமா? நாம் ஒவ்வொரு நட்சத்திரத்துக்கும் தரப்போகும் நட்சத்திர மாதங்கள் தான்.

நம் கர்ம வினைகளை விசாரித்து நீதி தரப்போகும் நீதிபதி யார் எனத்தேரியுமா? இறைவன் தான் அந்த நீதிபதி.

அகண்ட வான மண்டலத்தில் சிதறிக்கிடக்கும் நட்சத்திரக் கூட்டங்களில் ஜோதிட சாத்திரம் தனக்காகத் தேர்ந்தெடுத்துக் கொண்ட 27 நட்சத்திரத் தொகுதிகளில் தான், ஒருவன் பிறக்க அல்லது இறக்க முடியும். இதை ஒன்பது கிரகங்களுக்கும் மும்மூன்று நட்சத்திரங்கள் வீதம் பிரித்துத் தரப்பட்டுள்ளது.

ஒரே கிரகத்திற்கு ஒதுக்கப்பட்ட மூன்று நட்சத்திரங்களும், அந்த கிரகக் காரகத்தை ஒட்டியே செயல் படுகின்றன. ஒருவர் எந்த நட்சத்திரத்தில் இறந்தாலும், அது எந்த கிரகக் காரகத்தைக் குறிக்கிறதோ, அந்த கிரகக் காரக ஏக்கத்தில் அல்லது தாக்கத்தில் இறந்தார் என்பதே அர்த்தமாகிறது. இந்தக் கருத்து பெரும்பாலும் அனுபவத்தில் ஒத்து வருகிறது.

இந்த 27 நட்சத்திரத் தொகுதிகளில் பஞ்சாங்கத்தில் குறிப்பிட்டுள்ள ஐந்து நட்சத்திரங்களில் யார் இறந்தாலும், அவர் அவிட்ட நாள் எனும் அடைப்பில் இறந்ததாகக் கருதப்படும். இது கடுமையான,”ஆத்மதோஷம்” தரும் நட்சத்திரங்கள் ஆகும்.

தனிஷ்டா பஞ்சமி அல்லது அடைப்பு நாளில் ஒருவர் இறந்தால், அந்த குடும்பத்தில் உள்ளவர்களுக்குள் ஓர் அச்ச உணர்வு ஏற்படுவதைக் காணலாம். இவரின் ஆத்மா சாந்தி அடையுமோ? அடையாதோ? நம் குடும்பத்தினருக்கு என்ன விதமான கேடுகளும், தீங்குகளும் ஏற்படுமோ? உயிர் இழப்பையும் பொருள் இழப்பையும் தாங்கமுடியுமோ? முடியாதோ? என்பதாகக் கவலைகள் ஏற்படுகின்றன.

இதற்கான பரிகாரவகைகளைத் தெரிந்து சாந்தி செய்துகொள்ள, ஜோதிடர்களையும், வேதம் அறிந்தவர்களையும் மக்கள் தேடி ஓடுகின்றனர்.

அவிட்டம் நட்சத்திரத்தை முதலாகக் கொண்டு, சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி ஆகிய ஐந்தும் தான், பஞ்சாங்கத்தில் குறிப்பிடப் பட்டுள்ள தனிஷ்டா பஞ்சமிக்கான நட்சத்திரங்கள் ஆகும்.

இதை, “அடைப்பு” என்னும், முதல் நட்சத்திரமாக, அவிட்டம் இருப்பதாலே, இந்த ஐந்து நட்சத்திரங்களும், “அவிட்டநாள்” என்றே பெரியோர்கள் அழைக்கின்றனர். ஆனால், பஞ்சாங்கத்தில், தனிஷ்டா பஞ்சமி” எனும் தலைப்பில், ஐந்து நட்சத்திரங்களோடு, மேலும், எட்டு நட்சத்திரங்களைத் தந்துள்ளனர்.

முதலில் நாம் இந்த ஐந்து நட்சத்திரங்களுக்கான விளக்கங்களையும், பாடல்களையும் காண்போம். அதன்பின் மீதம் உள்ள எட்டு நட்சத்திரங்களையும், அதற்குண்டான ஜோதிடப் பாடல்களையும் காண்போம். “தனிஷ்டா பஞ்சமி” குறித்தப் பாடல்கள் ஏதேனும், நம் தமிழ் ஜோதிடநூல்களில் உள்ளனவா? எனத் தேடிப் பார்த்த அளவில், சில பாடல்கள் கிடைத்தன.

இறந்துவிட்டால் வீட்டை அடைக்க நாளைக் கேளாய்
இயல்பான அவிட்டமோடு சதையம் பின்னும்
சிறந்த உத்திரட்டாதி பூரட்டாதி
செப்பிடும் ரேவதியோடு ஐந்து நாளது
திறந்து சொல்வேன் தனிஷ்டா பஞ்சமியே யாகும்
சீரில்லாத இன்னாளில் இறப்பாராகில்
பிறந்த வோரைந்து நட்சத்திரத்திற்கும்
பெலமாக வீட்டை அடைக்க நாளைக் கேளே!

இதுபோன்ற எளிய பாடல்களுக்கு விளக்கம் தேவையில்லை என நினைக்கிறேன். மேலும், சில பாடல்களைக் காண்போம்.
இந்த நல்ல அவிட்டத்திற்கு ஆறு மாதம்
இயல் சதையம் ஆனதற்கு மூன்று மாதம்
வந்த பூரட்டாதிக்கு ஒன்றரையாம் திங்கள்
மகிழும் உத்திராட்டாதிக் கோர் மாதம் தான்
அந்தமுள்ள ரேவதிக்குப் பதினைந்தே நாள்
அருமையாய் வீடு அடைக்க நாளிதாகும்
சிந்தையாய் ஒன்றுமில்லை சாந்தியாகச்
செய்யலாம் இன்னுமொரு வகையைக் கேளே!

தனிஷ்டாபஞ்சமி பற்றிய எல்லா பஞ்சாங்க நூல்களிலும், அவிட்டம் முதல் ரேவதி வரையிலான, ஐந்து நட்சத்திரங்களுக்கும், ஒரே கால அளவாக ஆறுமாதத்திற்கு வீடு அடைக்கவேண்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது.

ஆனால், இந்த பாடலில் அவிட்டத்தில் இறந்தால் மட்டுமே, ஆறுமாதத்திற்கு விளக்கேற்றி வழிபட்டப் பின் வீடு அடைக்க வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

இதேபோல் சதையத்திற்கு மூன்று மாதமும், பூரட்டாதிக்கு ஒன்றரை மாதமும், உத்திரட்டாதிக்கு ஒரு மாதமும், ரேவதிக்கு வெறும் பதினைந்தே நாட்களும் விளக்கேற்றி வழிபட்டப் பின் வீடு அடைக்க வேண்டும் எனக் குறிப்பிடப் பட்டுள்ளது. மேலும், இதற்குப் பரிகாரமாக ஒருப் பாடல் குறிப்பிடப் பட்டுள்ளது.

வீட்டைக்கு மிந்த நட்சத்திரங்கட்கு
வினை தீர மறுபக்கம் சுவர் இடித்துக்
கூடவே அவ்வழியாய் பிரேதந்தன்னைக்
கொண்டுவரில் வீடடைக்கத் தேவையில்லை.
தேடவே சாந்தி செய்யில் வீடிடிக்கத்
தேவையில்லை நேர்வழியா யெடுக்கலாகும்
நீடவே யிதையறிந்து செய்வாராகில்
நீடூழி காலம் வரை வாழலாமே.

இதுவரை அவிட்டம் முதலாக ரேவதி வாரையிலான ஐந்து நட்சத்திரங்களுக்கு உண்டான பாடலைத்தான் கண்டோம்.

இப்போது, மேலும் எட்டு நட்சத்திரங்களுக்கு உண்டான பாடலைக் காண்போம்.
புள்ளு முதல் ரேவதியோர் ஐந்து நாளும்
புனித பிதிர் பாகமாகா வாறு மாதம்
துள்ளு மான் தலை நடு நாள் கழை விசாகம்
சொல்லாடியைந்துக்கு(ம்) மிரண்டாமாதம்
நள்ளிமுத்திரத்துக்கு மூன்றாம்பார்க்கு
நான்காகுமிவைகற்ப பாகமென்பர்
விள்ளுமிவற்றினில் இறந்தால் வீட்டை மூட
வேணுமென்றே மேலோர்கள் அறைந்தாரன்றே!

அவிட்டம், சதயம், பூரட்டாதி, உத்திரட்டாதி, ரேவதி என்னும் பிதுர் பாகமாகிய தனிஷ்டாபஞ்சமிக்கு ஆறுமாத காலமும், விகற்பமாக ரோகிணிக்கு நான்கு மாதகாலமும், கார்த்திகை, உத்திரத்துக்கு மூன்று மாதகாலமும், மிருகசீரிடம், சித்திரை, புனர்பூசம், விசாகம், உத்ராடத்துக்கு இரண்டு மாத காலமும் ஆக இந்த பதிமூன்று நட்சத்திரங்களில் யார் இறந்தாலும் விளக்கேற்றி, வழிபட்டப் பின் வீடு மூடவேண்டும் எனப் பெரியோர்கள் கூறுகின்றனர்.

No comments:

Post a Comment