டீடாக்ஸ் சிகிச்சைகள் கம்ப்ளீட் கைடு!
உடலை சுத்தப்படுத்தும் முறைகள் பற்றிய விரிவான குறிப்புகள் !
உடல் சுத்தமாகவும் சுகாதாரமாகவும் இருப்பதுதான், நமது ஆரோக்கியத்தின் அடையாளம். சுத்தமாக இருப்பது என்றால், குளித்துச் சுத்தமாக இருப்பது மட்டும் அல்ல... உடலுக்கு உள்ளேயும் நச்சுக்கள் இல்லாமல் சுத்தமாகவைத்திருப்பதும்தான். அந்தக் காலத்தில், உடலுக்குள் இருக்கும் நச்சுக்களை வெளியேற்ற பல வழிமுறைகளைக் கையாண்டார்கள்.
ஆறு மாதங்களுக்கு ஒரு முறை வாந்திக்கு மருந்து எடுத்துக்கொள்வது;
நான்கு மாதங்களுக்கு ஒரு முறை பேதிக்கு மருந்து சாப்பிடுவது அல்லது எனிமா எடுத்துக்கொள்வது;
இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை மூக்கில் மருந்தைவிட்டுச் சுத்தப்படுத்துவது;
மூன்று நாட்களுக்கு ஒரு முறை கண்களில் அஞ்சனமிடுவது;
மாதத்துக்கு ஒரு முறை உண்ணா நோன்பு இருப்பது போன்றவற்றைக் கடைப்பிடித்து, நச்சுக்களை வெளியேற்றினார்கள். இதனால், உள்ளுறுப்புகள் பாதுகாக்கப்பட்டன. உடலுக்குப் புத்துணர்ச்சி கிடைத்தது. சுறுசுறுப்பும் ஆரோக்கியமும் கூடின. நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்தது. உள் உடலை, வாந்தி, வயிற்றுப்போக்கு, நோன்பு போன்ற வழிமுறைகளில் சுத்தம் செய்வதைப்போல, வெளி உடலைச் சுத்தம் செய்ய மூலிகைக் குளியல் முதல் மண் குளியல் வரை பல விஷயங்களைக் கற்றுத்தந்தன, நம் பாரம்பர்ய சித்த, ஆயுர்வேத மருத்துவங்கள்.
அதனால்தான் அந்தக் காலத்தில், சனிக்கிழமையானால் விளக்கெண்ணெயைக் கையில்வைத்துக்கொண்டு தாத்தா - பாட்டிகள், குழந்தைகளைத் தேடிக்கொண்டிருந்தார்கள். இன்றைய சூழ்நிலையில் அதற்கெல்லாம் வாய்ப்பு இல்லை. உடல் நச்சுக்களைக் குறைக்க, டேப்லெட் தேடும் நிலைக்கு வந்துவிட்டோம். இதனால், உடலில் நச்சுக்கள் சேர்ந்து, பல்வேறு நோய்களை ஏற்படுத்துகின்றன.
மூன்று மாதங்களுக்கு ஒரு முறையோ அல்லது மாதத்துக்கு ஒரு முறையோ உடலில் உள்ள நச்சுக்களை நீக்கும் சிகிச்சையைச் செய்துகொள்வதன் மூலம், நம் ஆரோக்கியத்தை மேம்படுத்தலாம். ‘நச்சுகளை எப்படி நீக்க வேண்டும், அதன் பலன்கள் என்னென்ன’ என விளக்குகின்றனர் ஆயுர்வேத மருத்துவர் தீனதயாளன், சித்த மருத்துவர் ஜெயவெங்கடேஷ் மற்றும் இயற்கை மருத்துவர் சோஃபியா தேன்மொழி.
டீடாக்ஸ் என்பது...
நம்முடைய உடலில் சேரும் நச்சுக்களை அகற்றும் பணியை கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செய்கின்றன. ஆனால், இவற்றால் எல்லா நச்சுக்களையும் வெளியேற்ற முடிவது இல்லை. நம் உணவுப் பழக்கம் மற்றும் வாழ்க்கைமுறையால் உடலில் சேரும் நச்சுக்களை, கழிவுகளை குறிப்பிட்ட கால இடைவெளியில் அகற்றுவதை ‘நச்சு நீக்கு சிகிச்சை’ அல்லது ‘டீடாக்ஸிஃபிகேஷன்’ (Detoxification) சுருக்கமாக, ‘டீடாக்ஸ்’ என்கிறோம்.
கிளென்சிங்
சருமத்தைச் சுத்தம் செய்வதை ‘கிளென்சிங்’ என்கிறோம். இதனால், தோலில் உள்ள அழுக்குகள், கிருமிகள், இறந்த செல்களை அகற்றலாம். ஆனால், கிளென்சிங்கால் நச்சுக்களை நீக்க முடியாது. நச்சு நீங்க வேண்டும் என்றால் டீடாக்ஸ் செய்ய வேண்டும்.
டீடாக்ஸ் ஏன் செய்ய வேண்டும்?
நம் உடலில் நச்சுக்கள் சேர்ந்துகொண்டே இருக்கின்றன. இவை குறைந்த அளவில் இருக்கும்போது பெரிய பாதிப்பு இல்லை. ஆனால், அதிகமாகும்போது, அவை செல் வரை சென்று சிதைவை ஏற்படுத்தும். இதனால், உடலில் உள்ள ஒவ்வோர் உறுப்பும் தன்னுடைய இயக்கத்தைக் குறைத்துக்கொள்ளும். இது தொடரும்போது, அந்த உறுப்புகள் பாதிக்கப்படும்; முதுமையை விரைவுபடுத்தும். இளமையிலேயே முதுமையான தோற்றம் ஏற்படும். சுறுசுறுப்பு குறைந்து, சோர்வு அதிகரிக்கும்.
யார் டீடாக்ஸ் செய்யலாம்?
எல்லா வகையான நச்சு நீக்க முறைகளையும் பெரியவர்கள் மேற்கொள்ளலாம். இருப்பினும், சித்தா, ஆயுர்வேதம், இயற்கை மருத்துவரிடம் ஆலோசனை பெற்றுக்கொள்வது பாதுகாப்பானது. ஆலோசனை பெறும்போதுதான், அவரவர் உடல்நிலைக்கு ஏற்ப எந்த மாதிரியான நச்சு நீக்க சிகிச்சை பெறுவது என முடிவு செய்ய முடியும்.
குழந்தைகளுக்கு வயிற்றைச் சுத்தப்படுத்த, பேதி மருந்து மட்டும் கொடுக்கலாம். இதையும், மருத்துவரின் ஆலோசனையின்படி கொடுக்க வேண்டியது அவசியம்.
நச்சுக்கள் சேரும் காரணங்கள்
உணவு, நீர், காற்று என எந்த ஒரு விஷயமும் உடலில் நச்சுக்களை ஏற்படுத்தும்.
சுவையூட்டிகள் சேர்ப்பது.
அதிக மசாலா, வனஸ்பதியை உணவில் சேர்ப்பது.
உணவுப் பொருட்களை சரியாகக் கழுவாமல் பயன்படுத்துவது.
சுகாதாரம் இல்லாத உணவுகளைச் சாப்பிடுவது.
மாசடைந்த நீரைப் பருகுவது.
சமைத்த உணவை மீண்டும் மீண்டும் சூடு செய்து சாப்பிடுவது.
ஏற்கெனவே பயன்படுத்திய எண்ணெயை மீண்டும் பயன்படுத்துவது.
பாமாயிலை உணவில் சேர்ப்பது.
பதப்படுத்தப்பட்ட உணவுகளை எடுத்துக்கொள்வது.
பூச்சிக்கொல்லி மற்றும் ரசாயன உரத்தால் விளைந்த உணவுப் பொருட்களை உட்கொள்வது.
டீடாக்ஸ் வகைகள்
ஆயுர்வேத சிகிச்சைகள்
‘நான் ஆரோக்கியமாகத்தானே இருக்கிறேன்... ஏன் டீடாக்ஸ் செய்துகொள்ள வேண்டும்?’ எனக் கேட்கலாம். நாம் ஆரோக்கியமாக இருந்தாலும், ஆரோக்கியமான உணவையே உட்கொண்டாலும் உணவு செரிமானம் ஆகும்போதும், ஊட்டச்சத்துக்களை செல்கள் பயன்படுத்தும்போதும் துணைப் பொருட்களாக நச்சுக்கள் உருவாகின்றன. இவற்றை அகற்றுவதன் மூலம், முழுமையான ஆரோக்கியத்தைப் பெற முடியும். நச்சுக்களை நீக்க ஆயுர்வேத மருத்துவம் ‘பஞ்சகர்மா’ சிகிச்சையை அளிக்கிறது. உடலைச் சுத்தப்படுத்த, அதாவது, கிளென்சிங் செய்ய ‘ஷோதனம்’ சிகிச்சையை அளிக்கிறது.
பஞ்சகர்மா
1. நசியம் (Nasiyam)
2. வமனம் (Vamanam)
3. விரேசனம் (Virechanam)
4. கஷாயவஸ்தி (Kashayavasti)
5. ஸ்நேஹாவஸ்தி (Snehavasti)
இந்த ஐந்து வகையான சிகிச்சைகளும்தான் ‘பஞ்சகர்மா’. உடலில் எந்த அளவுக்கு நச்சு இருக்கிறதோ, அதைப் பொறுத்து, எந்த மாதிரியான நச்சு அகற்றும் சிகிச்சை தேவை என மருத்துவர் முடிவு செய்வார். ‘எனக்கு நசிய சிகிச்சை மட்டும் போதும்’ என்றோ, ‘வமன சிகிச்சை கொடுங்கள்’ என்றோ நோயாளி முடிவு செய்ய முடியாது. நோய் மற்றும் நோயாளிகளின் தன்மை, நோயின் வீரியத்தைப் பொறுத்து ஒவ்வொரு சிகிச்சையின் கால அளவும் மருந்துகளின் அளவும் மாறுபடும்.
நசியம்
மூக்கில் செய்யும் சிகிச்சை ‘நசியம்’. மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தை மூக்கில்விடுவார்கள். பிரச்னையைப் பொறுத்து, இரண்டு முதல் ஏழு சொட்டுகள் வரை விடப்படும். மூக்கில் விடும் மருந்து, தலையில் உள்ள உறுப்புக்களுக்குச் சென்று, நச்சு நீக்கும் பணியைச் செய்யும்.
பலன்கள்: சுவாசம் தொடர்பான பிரச்னைகள், நாள்பட்ட நோய்கள், குரல் தொடர்பான பிரச்னை, தீவிரமான தலைவலி, ஒற்றைத் தலைவலி, தீவிரமான சைனஸ் போன்ற பிரச்னைகளுக்குத் தீர்வு அளிக்கும் சிகிச்சை இது.
சுத்தமாகும் பகுதி: மூக்கு முதல் சுவாசப் பாதை வரை சுத்தமாகும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
வமனம்
‘வமனம்’ என்றால், வாந்தி எடுத்தல் என்று பொருள். இதற்காக, மூலிகைகள், பசும்நெய் கொண்டு தயாரிக்கப்பட்ட மருந்தைக் குடிக்கக் கொடுப்பர். மேலும், சில மருந்துகளும் கொடுக்கப்படும். இவை வயிற்றுக்குள் சென்றதும், வாந்தியை ஏற்படுத்தும். வாந்தி வழியாக நச்சுக்கள் வெளியேறும்.
பலன்கள்: சர்க்கரை நோய், உடல்பருமன், தைராய்டு, கல்லீரல், வளர்சிதைப் பிரச்னை, குடிநோயால் பாதிக்கப்பட்டோர் பிரச்னைகள், சரும நோய்கள் போன்றவற்றைத் தீர்க்கும்.
சுத்தமாகும் பகுதி: வாய் முதல் வயிறு வரை உள்ள பகுதிகள் சுத்தமாகும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒருமுறை செய்யலாம்.
விரேசனம்
வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதல் என்று பொருள். இதற்கு, மூலிகைகள் மூலம் தயாரிக்கப்பட்ட மருந்து கொடுக்கப்படும். மருந்து வயிற்றுக்குள் சென்று வேலை செய்ய ஆரம்பித்ததும், பேதி ஆகும். வயிற்றில் உள்ள நச்சுக்களும் வெளியேறும்.
பலன்கள்: சரும நோய்கள், சிறுகுடல் தொடர்பான பிரச்னை, பெருங்குடல் இயக்கம் தொடர்பான கோளாறுகள் போன்றவற்றைத் தீர்க்கும்.
சுத்தமாகும் பகுதி: உணவுக்குழாயை மட்டும் அல்லாமல், செரிமான மண்டலத்தில் உள்ள கல்லீரல், மண்ணீரல் என எல்லா உறுப்புகளிலும் செயல்படும். இந்தச் சிகிச்சையை மூன்று வாரங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
கஷாய வஸ்தி
ஆசனவாய் வழியாக மருந்தைச் செலுத்தி, வயிற்றுப்போக்கு ஏற்படுத்துவதை ‘வஸ்தி’ அல்லது ‘கஷாயவஸ்தி’ என்பார்கள். இதில், எனிமா கொடுத்துக் கழிவுகள் வெளியேற்றப்படும்.
பலன்கள்: தீவிரமான அடி முதுகுவலி, முதுகுத்தண்டு பிரச்னை, மூட்டுப் பிரச்னை, வலி, ஆர்த்ரைட்டிஸ் போன்ற பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
ஸ்நேஹவஸ்தி
மருத்துவ மூலிகைகள் கலந்த எண்ணெயைக் கொடுப்பர். எண்ணெய் கொடுப்பதால், கழிவுகள் வெளியேற்றப்படும்.
பலன்கள்: முதுகுவலி, மலச்சிக்கல், தளர்வடைந்த தசைகள், மூட்டு தொடர்பான பிரச்னைகளுக்குச் செய்யப்படும் சிகிச்சை.
சுத்தமாகும் பகுதி: கல்லீரல், சிறுநீரகம், பெருங்குடல், மலக்குடல் ஆகியற்றைச் சுத்திகரிக்கும். இந்த சிகிச்சையை மூன்று மாதங்களுக்கு ஒரு முறை செய்யலாம்.
சித்த மருத்துவ நச்சு நீக்க சிகிச்சைகள்
வேது
நீராவி பிடிப்பதைத்தான் ‘வேது’ என்கின்றனர். இதனை, பல ஸ்பா சென்டர்கள், ஸ்டீம் பாத் ஆக அளிக்கின்றன. நொச்சி, வேப்பிலை, மஞ்சள், சூடான செங்கல், வெற்றிலை, திருநீற்றுப்பச்சிலை, துளசி, எலுமிச்சைச் சாறு ஆகிய மூலிகைகளை வெந்நீரில் கொட்டி, நீராவி பிடிப்பதால், வியர்வை மூலமாகக் கழிவுகள் வெளியேறும். மாதம் இரு முறை நீராவி பிடிக்கலாம்.
சுட்டிகை
வெயிலில் நிற்பதன் மூலம், உடலின் வெப்பநிலையை அதிகரித்து, வியர்வையைப் பெருகச் செய்யும் சிகிச்சை. வியர்வை வழியாக நச்சுக்கள் வெளியேறும். ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளை காலை ஏழு மணிக்கு முன், வெயிலில் 15 நிமிடங்கள் நிற்கவைக்கலாம். நடுத்தர வயதினர் மற்றும் முதியவர்கள் மாலை வெயிலில் 20 நிமிடங்கள் நிற்கலாம்.
தலைக் கழிவு
பற்றுப் போடுவதன் மூலம் நச்சுக்களை அகற்றும் முறை இது. சைனஸ், நீர்கோத்தல் பிரச்னை இருப்போர், நொச்சி, தும்பைப்பூ, தைவேலை ஆகிய மூலிகைகளை அரைத்து, நெற்றியில் பற்றுப் போடலாம். 20 நிமிடங்கள் வரை இதை அகற்றக் கூடாது. இதன் மூலம், தலையில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். அனைவரும், மாதம் இரு முறை போட்டுக்கொள்ளலாம். மழைக்காலத்தில் ஒருமுறை போதும்.
வாந்தி அமர்த்தல்
சித்த மருத்துவர், நோயாளிக்கு மறுக்காரை, கடுகு, உப்பு நீர் கலந்து குடிக்கக் கொடுப்பார். குடித்த உடன் வாந்தி ஏற்படும். இதன்மூலம், இரைப்பையில் உள்ள கழிவுகள் வெளியேற்றப்படும். இதை ஆறு மாதங்களுக்கு ஒரு முறை மட்டுமே செய்ய வேண்டும்.
நசியம்
சொட்டு மருந்தை மூக்கில் விட்டுச் செய்யும் சிகிச்சை. உப்பு நீர், சுக்குத் தைலம், நாசிரோகநாசத் தைலம், தும்மைப்பூச் சாறு, தைவேலைச் சாறு ஆகியவை கலந்த மருந்தை, நோயாளியின் மூக்கில் விடுவார். இதை, மாதம் ஒரு முறை செய்யலாம். மூக்கில் உள்ள கெட்ட நீர் வெளியேறும். தீராத தலைவலிகள் குணமாகும்.
நாசிகா பரணி
மூக்கில் மூலிகைப் பொடிகளைப் போட்டு, தும்மலை ஏற்படுத்துவது. மூக்கில் சுண்டைக்காய் வேர், சந்தனத் தூள், அக்ராஹாரம் போன்ற மூலிகைகளைத் தூளாக அரைத்துப் போட்டு, தும்மல் உருவாகச் செய்து கழிவுகளை வெளியேற்றுவர். இதையும், மாதம் ஒரு முறை என, பிரச்னை இருப்பவர்களுக்கு மட்டும் சித்த மருத்துவர் பரிந்துரைப்பார்.
கழிச்சல் வயிற்றுப்போக்கை ஏற்படுத்துதலைத்தான் ‘கழிச்சல்’ என்பர். மருத்துவர் ஆலோசனையோடு முருக்கன் விதை மாத்திரை அல்லது எப்சம் உப்பு மற்றும் கீழாநெல்லி சாறு ஆகியவை கொடுக்கப்படும்.
பொதுவான டீடாக்ஸ் முறைகள்
பழங்கள்-
இளநீர் டயட்
இரு வாரங்களுக்கு ஒரு முறை, ஒரு நாள் முழுவதும் வெறும் பழங்களை மட்டுமே முன்று வேளையும் எடுத்துக் கொள்ளலாம். 20 வயதுக்கு மேற்பட்டோர், மாதம் ஒரு முறை, இரு வேளைக்கும் சேர்த்து, ஐந்து இளநீர் வரை குடிக்கலாம். இரவில் மிகக் குறைந்த அளவு உணவை எடுத்துக்கொள்ளலாம். இரவு, உணவு சாப்பிட்ட ஒரு மணி நேரத்துக்குப் பின் உறங்கலாம்.
அசோகப்பட்டை நீர்
அசோகப்பட்டையைச் சூரணம் அல்லது கஷாயத்தில் சிறிதளவு கலந்து குடிக்க, கர்ப்பப்பை சுத்தமாகும். பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்குப் பிரச்னை தீரும்.
சீரகக் குடிநீர்
நீரைக் கொதிக்கவைத்து, நன்கு கொதிக்கும் நீரில் சீரகத்தைப் போட்டு இறக்கி, அன்றைய தினம் முழுவதும் குடித்துவரலாம். வயிற்றுப் பொருமல், வயிற்று வலி ஆகிய பிரச்னைகளுக்குச் சீரகத் தண்ணீர் குடிக்கலாம். பசியைத் தூண்டும், செரிமானத்தைச் சீராக்கும்.
பெருநெல்லிச் சாறு
நெல்லிக்காயை விதை நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக்கொள்ள வேண்டும். அதில், சிறிதளவு தண்ணீர்விட்டு, நன்கு அரைத்து, சாறு பிழிய வேண்டும். இதைத் தினமும் அருந்தலாம். நெல்லியில் ஆன்டிபயாட்டிக் இருப்பதால், கிருமிகள் மற்றும் கழிவுகளை அகற்றும். எதிர்ப்பு சக்தியைக் கூட்டும். வைட்டமின் சி சத்து நிறைந்திருப்பதால், உடலுக்கு நல்லது. வளர்சிதை பிரச்னை, அல்சர் போன்ற பிரச்னைகளுக்கு, நெல்லிச் சாறு அருந்தலாம். கல்லீரலைச் சுத்தப்படுத்துவதில் நெல்லிக்கு முக்கியப் பங்கு உண்டு.
தினமும் எடுத்துக் கொள்ளக் கூடியவை...
நரம்பு டானிக்... பிரம்மி!
பிரம்மி இலைகள் மற்றும் வேர் போட்டுக் கொதிக்கவைத்த நீரை அருந்தலாம். சின்னச்சின்ன இலைகளாக இருக்கும் இதன் வேரும் நல்லது. நரம்பு தொடர்பான பிரச்னைகளைச் சரிசெய்யும். குழந்தைகள், பெரியவர்கள் மற்றும் நரம்பு தொடர்பான பிரச்னைகள் உள்ளவர்கள் அனைவரும் அருந்தலாம்.
மரமஞ்சள்
மருந்தாக அல்ல, தினசரி உணவிலேயே சிறிது மரமஞ்சளை சேர்த்துக்கொள்ளலாம். இது, அல்சர், வயிற்று எரிச்சல், வறட்டு இருமல் போன்ற பிரச்னைகளுக்கு அருமருந்தாகும். வயிற்றைச் சுத்தம் செய்யும். கிருமிகளை அழிக்கும். நச்சுக்களை அகற்றும்.
இளநீருடன் ஏலக்காய்
இளநீரில் ஏலக்காய் ஒன்றைத் தட்டிப்போட்டுக் குடிக்க, சிறுநீர் தொற்றைச் சரிசெய்யும். பெண்களுக்கு அடிக்கடி ஏற்படும் சிறுநீர் தொற்றைக் குணமாக்கும். கிருமிகளை அழிக்கும்.
சீந்தில்கொடி கஷாயம்
சீந்தில் இலைப்பொடியைக் கஷாயமாக வைத்துக் குடித்தால், எலும்பு, மூட்டுகள் தொடர்பான பிரச்னையைச் சரிசெய்யும்.
கடுக்காய்ப் பொடி
கடுக்காய்ப் பொடியை வெந்நீரில் கலந்து, இரவில் ஒரு கிளாஸ் குடிக்க, மறுநாள் வயிறு சுத்தமாகும். மலச்சிக்கல் பிரச்னை தீரும்.
எலுமிச்சைச் சாறு
தேன் கலந்த எலுமிச்சைச் சாறு, உடல்பருமனைக் குறைத்து கெட்ட கொழுப்பைக் கரைக்கும். அதிகப்படியான பொட்டாசியம் சத்து இருப்பதால், இதய நோய்கள் வராமல் தடுக்கும்.
இளநீர்
உடல் உழைப்பு அதிகம் செய்பவர்கள், உடற்பயிற்சி செய்பவர்கள் வாரத்துக்கு மூன்று முறை இளநீர் குடிக்கலாம். அவர்கள் இழக்கும் நீர்ச்சத்தை இளநீரால் மீட்டு எடுக்க முடியும். வெறும் வயிற்றில் குடிக்காமல், உணவுக்குப் பின் இரண்டு மணி நேரம் கழித்துக் குடிக்கலாம்.
ஏபிசி ஜூஸ்
ஆப்பிள் - 1, பீட்ரூட் - 1/4, கேரட் - 1 ஆகியவற்றுடன் சிறிது புதினா இலைகளைச் சேர்த்து, சிறிது தண்ணீர் விட்டு அரைத்து அப்படியே பருகலாம். உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்கிறது.
கிரீன் டீ
ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால், கிரீன் டீ உடலின் நச்சுக்களை அகற்றும். புற்றுநோய் செல்கள் உருவாவதைத் தடுக்கும். உடலின் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்.
ஆவாரம் பூ ஜூஸ்
ஆவாரம் பூ, நெல்லிக்காய் ஆகியவற்றைத் தேன் கலந்து ஜூஸாக்கிக் குடிக்க, சரும செல்கள் புத்துயிர் பெற்று, சருமம் பொலிவாகும். சருமம் பளிச்சென இருக்கும்.
திரிபலா டீ
கடுக்காய், தான்றிக்காய் மற்றும் நெல்லிக்காய் சேர்ந்த கலவைதான் திரிபலா. ஒரு கப் வெந்நீரில் கால் டேபிள்ஸ்பூன் திரிபலா பொடியைப் போட்டு, தேன் கலந்து, வாரம் இருமுறை குடிக்கலாம். கெட்ட கொழுப்பு, கழிவுகள், நச்சுக்கள் ஆகியவற்றை அகற்றும்.
அருகம்புல் ஜூஸ்
ஒரு கைப்பிடி அருகம்புல், சீரகம், உப்பு ஆகியவற்றுடன் சிறிது தண்ணீர் கலந்து, ஜூஸாக அடித்து, 15 நாட்களுக்கு ஒரு முறை குடிக்க, உடலில் உள்ள தேவையற்ற தாதுஉப்புகள் வெளியேறும்.
தாளித்த மோர்
மோரில் புரோபயாடிக் சத்துக்கள் உள்ளன. மதிய உணவு சாப்பிடுவதற்கு முன் மோர் அருந்துவது நல்லது. வாயு தொடர்பான பிரச்னை, அல்சர், ஆசிட் உருவாவது போன்ற பிரச்னைகளைத் தடுக்கும். மோருடன் சிறிது சீரகம், பெருங்காயம், சின்ன வெங்காயம் கலந்து குடிக்க வேண்டும்.
அஷ்ட சூரணம்
சுக்கு, திப்பிலி, மிளகு, வால் மிளகு கலந்த அஷ்ட சூரணத்தை, மோரில் கலந்து குடிக்கலாம். வாயுத் தொல்லை இருப்பவர்கள் அவசியம் குடிக்க வேண்டும். குழந்தைகளுக்கு சாதத்தில் கலந்து கொடுக்கலாம்.
டீடாக்ஸ் டீ
செம்பருத்திப் பூ, தாமரை இதழ் ஆகியவற்றை, சந்தனக்கட்டை ஊறிய நீரில் போட்டுச் சூடாக்கி, தேன் கலந்து சாப்பிடலாம். ஒரு சந்தனக் கட்டையை வாங்கி, ஒவ்வொரு முறையும் ஊறவைத்து, மீண்டும் தனியே எடுத்து வைத்துக்கொள்ளலாம். இது ரத்தத்தைச் சுத்திகரிக்கும். ரத்தத்தில் உள்ள கழிவுகளை நீக்கும்.
இயற்கை மருத்துவத்தில் டீடாக்ஸ்!
கீரைகள், பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றை அவசியம் சாப்பிடவும்.
ஒரு நாளைக்கு மூன்று நிறக் காய்கறிகள், பழங்களைச் சாப்பிட வேண்டும்.
காலையில் ஐந்து முதல் ஏழு மணிக்குள் எழுந்திருப்பது நல்லது.
காலை மூன்று முதல் ஐந்து மணி நுரையீரலின் நேரம், என்பதால் சாப்பாடு இல்லாத உடலாக இருப்பதால், சுத்தமான காற்றை கிரகித்துக்கொள்ள உதவியாக இருக்கும். சீரான எண்ணங்கள் தோன்றும். மூளையின் ஆற்றல் அதிகரிக்கும். அந்த நாளே உற்சாகமாக மாறும். மனம் ரிலாக்ஸாக இருக்கும்.
காலை ஐந்து முதல் ஏழு மணி பெருங்குடலின் நேரம், ஒவ்வொரு மனிதனும் ஏழு மணிக்குள் மலம் கழித்துவிட வேண்டும். முதல் நாள் சேர்த்துவைத்த கழிவுகள் வெளியேறிவிட்டால், உடல் சுத்தமாகிவிடும்.
காலை ஏழு முதல் ஒன்பது மணிக்குள் காலை உணவை எடுத்தாக வேண்டும். உணவின் நேரம் தவறாமல் பார்த்துக்கொள்வது அவசியம். அதுபோல மதியம் ஒன்றிலிருந்து இரண்டு, இரவு எட்டு முதல் ஒன்பது மணிக்குள் உணவை முடித்துவிட வேண்டும்.
தினமும் இரண்டு முதல் மூன்று லிட்டர் நீர் அருந்துவது நல்லது.
ஆழ்ந்த தூக்கம் இரவு 11 முதல் அதிகாலை 3 மணி வரை இருப்பதாக அமைத்துக்கொள்வது, பல நோய்களை வராமல் தடுக்கும். இந்த நேரம் கல்லீரல் மற்றும் பித்தப்பையின் நேரமாக இருப்பதால், இந்த நேரத்தில் தூங்குவது முக்கியம்.
உடலில் கழிவுகள் சேராமல் தடுக்க...
சிறுதானியம், கோதுமை, தவிடு நீக்கப்படாத அரிசி ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
பயறு, காய்கறி, கனி வகைகள், தானியங்கள் ஆகியவற்றைச் சுழற்சிமுறையில் சாப்பிடலாம்.
ரவை, மைதா, வெள்ளைச் சர்க்கரை ஆகியவற்றைத் தவிர்க்கலாம். ரவை, சேமியா ஆகியவற்றில் எண்ணெய் சேர்த்து, உணவைத் தயாரிக்கக் கூடாது.
எண்ணெயில் பொரிக்கப்பட்ட உணவுகளைத் தவிர்க்கலாம்.
உணவைச் செக்கில் ஆட்டிய எண்ணெயால் சமைப்பது உடலுக்கு நல்லது.
எண்ணெய் குளியல்
வாரம் ஒருமுறை நல்லெண்ணெய், ஷீராபலா தைலம், ஏலாதித் தேங்காய் எண்ணெயைத் தலையில் தேய்த்து, 15 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம். கண்களுக்குக் குளிச்சியைத் தரும். நல்ல தூக்கம் வரும். அன்று நாள் முழுவதும் லேசான உணவுகளைச் சாப்பிடலாம். இதுவே, உடலில் உள்ள ஆற்றலைப் புதுப்பிக்கும் புத்துணர்ச்சியை உண்டாக்கும்.
நல்லெண்ணெயில் பூண்டு, மிளகு தட்டிப்போட்டு, லேசாகச் சூடு செய்து, முதலில் உடல், பின் தலைமுடி எனப் பூசிய, 20 நிமிடங்கள் கழித்துக் குளிக்கலாம்.
சாதாரண ஹெட் பாத் இருமுறை எடுக்கலாம்.
பலாஅஸ்வனகந்தித் தைலம் (மருத்துவ மூலிகைகள் கொண்ட நல்லெண்ணெய் இது) போன்ற எண்ணெயை, உடல் முழுதும் 20 நிமிடங்கள் பூசிய பின் குளிக்கலாம்.
டீடாக்ஸ் செய்யும் மூச்சு பயிற்சிகள்
கபாலபாதி
சப்பளாங்கால் போட்டு அமர்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக வெளியில்விட வேண்டும். இதில், மூச்சை உள் இழுப்பதற்கு எந்தவிதக் கவனமும் செலுத்த வேண்டாம். அது இயற்கையாகவே நிகழும். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். சத்தத்தை அடக்கிவைக்கத் தேவை இல்லை.
வஸ்திரிகா
சப்பளாங்கால் போட்டு உட்கார்ந்து, கைகளில் சின்முத்திரை வைத்துக்கொண்டு, மூச்சை வேகமாக இழுத்து, வேகமாக வெளியில் விடலாம். வேகமாகச் செய்யும்போது, வெளியில் சத்தம் வரும். ஒரு நிமிடம் வரை செய்யலாம்.
குறிப்பு: ரத்த அழுத்தப் பிரச்னை, ஆஸ்துமா, பைபாஸ் சர்ஜரி செய்தோர் தவிர்க்க வேண்டும்.
பலன்கள்: இந்த இரண்டு மூச்சுப் பயிற்சிகளும் நுரையீரல், மூக்கு, சுவாசப்பாதை, வயிறு ஆகியவற்றைச் சுத்தம் செய்யும். இந்தப் பயிற்சிகள் சர்க்கரை நோயாளிகளுக்கு நல்லது.
டீடாக்ஸ் ஆசனங்கள்...
போட் ரைடிங்
காலை நீட்டி உட்கார வேண்டும். பின்புறம் சாய்ந்திருக்க வேண்டும். மூச்சை இழுத்தபடி, கைகளைத் துடுப்பு போல கடிகாரத் திசையில் (கிளாக் வைஸ்) சுழற்ற வேண்டும். (சுழற்றும்போது, கையின் கட்டைவிரல்களை உட்புறம் வைத்து மடித்துக்கொள்ளவும்) பிறகு, மூச்சை விட்டுக்கொண்டே எதிர் கடிகாரத் திசையில் (ஆன்டி க்ளாக்வைஸ்) சுழற்ற வேண்டும். இரண்டையும் தலா 10 முறை செய்ய வேண்டும்.
குறிப்பு: முதுகு வலி, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்கள் கர்ப்பிணிகள், வலிப்பு நோயாளிகள், காய்ச்சல் வந்தோர், மாதவிலக்கு நேரத்தில் இருப்பவர்கள் செய்யக் கூடாது.
பலன்கள்: உடல் எடை குறையும். கல்லீரல் சுத்தமாகும். வயிற்றைச் சுற்றியுள்ள கொழுப்பு கரையும். சர்க்கரை நோயாளிகள் அவசியம் செய்யலாம். உடல் எடையை குறைக்க நினைப்போருக்கு, சிறந்த பயிற்சி இது. கெட்ட கொழுப்பு நீங்கும்.
டைனமிக் ஸ்பைனல் ட்விஸ்ட்
காலை நீட்டி ‘V’ போல பரப்பிக்கொள்ளவும். கைகளை நேராக நீட்டிக்கொள்ளும்போது மூச்சை இழுத்துக்கொள்ள வேண்டும். வலது பக்கம் உடலை வளைத்து, வலது காலைத் தொடும்போது, மூச்சை விடவும். மீண்டும் மூச்சை இழுத்தபடி நேர் நிலைக்கு வந்து, இடது பக்கம் வளைந்து, இடது காலைத் தொடும் போது மூச்சை விடவும். இது, ஆங்கில எழுத்து ‘X’ போன்ற வடிவமாகத் தெரியும். இந்தப் பயிற்சியை இருபுறமும் ஐந்து முறை செய்யலாம்.
குறிப்பு: கர்ப்பக் காலம், காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் இந்தப் பயிற்சியைச் செய்யக் கூடாது.
பலன்கள்: முதுகு வலி சரியாகும். தொடை, வயிற்றுப் பகுதி உறுதியாகும். வயிறு ட்விஸ்ட் ஆவதால், கல்லீரல், சிறுநீரகம், சிறுகுடல், பெருங்குடல் போன்ற உறுப்புகள் இயக்கம் பெற்று, அந்தப் பகுதிகளில் உள்ள கழிவுகள் வெளியேறும். அடிவயிறு சுத்தமாகும்.
ஃபார்வேர்ட் பெண்டிங்
காலை மடக்கி அதன் மேல் உட்காரவும். பாதங்களை ‘V’ போல விரித்து உட்கார்ந்தால், வலி தெரியாது. காலின் வலது கட்டைவிரல் இடது கட்டைவிரலின் மேல் பதிய வேண்டும். இதுதான் வஜ்ராசனம் போஸ். கையின் கட்டைவிரலை உள்வைத்து மூடி, தொடை மற்றும் அடிவயிற்றுப் பகுதியின் மேல் வைத்து, முன்பக்கம் குனிய வேண்டும். எழுந்திருக்கும்போது மூச்சை இழுக்கவும். வஜ்ராசன நிலைக்கு வந்த பின், மூச்சை விட்டுவிடவும்.
குறிப்பு: அடிஇறக்கம், பைல்ஸ், ஆஸ்துமா போன்ற பிரச்னைகள் இருப்போர் தவிர்க்கவும். காய்ச்சல், மாதவிலக்கு சமயங்களில் செய்யக் கூடாது.
பலன்கள்: அடிவயிறு அழுத்தப்படுவதால், செரிமானம் தொடர்பான பிரச்னைகள் சரியாகும். மலச்சிக்கல் சரியாகும். சர்க்கரை நோய் கட்டுக்குள் வரும். மாதவிலக்குப் பிரச்னை சீராகும். தொப்பை கரையும். கெட்ட கொழுப்பு வெளியேறும். உடல் பருமன் குறையும்.
ஐந்து நாட்கள் செய்ய வேண்டிய டீடாக்ஸ் டிரிங்க் டயட்
முதல் நாள் எலுமிச்சைச் சாற்றை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்.
இரண்டாவது நாள், நெல்லிச் சாற்றை அருந்தலாம்.
மூன்றாவது நாள், சாத்துகுடிச் சாற்றைக் குடிக்கலாம்.
நான்காவது நாள், திராட்சை சாற்றைக் குடிக்க வேண்டும்.
ஐந்தாவது நாள், அன்னாசிப்பழ சாற்றை அருந்தி, டயட்டை முடித்துக்கொள்ளலாம்.
தொடர்ச்சியாக இந்த ஐந்து நாட்களுக்கு இந்த ஐந்து சாறுகளை அருந்துவதே டீடாக்ஸ் டிரிங்க் டயட்.
பலன்கள்: கல்லீரல் சுத்தமாகும். சிட்ரஸ் வகை பழங்கள் கல்லீரலில் உள்ள நச்சுத்தன்மையை முற்றிலுமாக நீக்கிவிடும். கெட்ட கொழுப்பு நீங்கும். உடல் எடை குறைப்போருக்கு சிறந்த தேர்வு. மாதத்தில் ஒரு முறை இந்த டீடாக்ஸ் டிரிங்க் டயட்டைப் பின்பற்றலாம். முடிந்தவரை சர்க்கரை சேர்க்காமல் தேன் அல்லது வெல்லம் சேர்த்துப் பருகலாம். ஒவ்வொரு செல்லுக்கும் புத்துயிர் கிடைக்கும்.
உச்சி முதல் பாதம் வரை கிளென்சிங்
கூந்தல்: கரிசலாங்கண்ணி மற்றும் கறிவேப்பிலை சாப்பிடுவது, குப்பைமேனியைக் கூந்தலில் பூசுவது, சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பயன்படுத்துவது போன்றவை கூந்தலைச் சுத்தம் செய்து, ஆரோக்கியமாக்கும்.
ஸ்கால்ப் (மண்டைத் தோல்): மண்டைத் தோலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள சுத்தமான தேங்காய் எண்ணெயைப் பூசலாம். மருத்துவ எண்ணெய்களை மருத்துவர் உதவியோடு பயன்படுத்தலாம். ஊறவைத்த வெந்தயக் குடிநீரை வாரம் மூன்று முறை குடிக்கலாம்.
மூளை: வால்நட், மீன், முட்டை, தானியங்கள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
கண்கள்: பொன்னாங்கண்ணி, பாதாம், கேரட் ஜூஸ், கேரட் ஆகியவற்றைத் தினமும் சாப்பிடலாம்.
சருமம்: பப்பாளி, மா, கேரட், சிட்ரஸ் பழங்கள், மாதுளை ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
உதடு: வெள்ளரி, பீட்ரூட் சாறு, புதினா ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
உணவுக்குழாய்: காரம், எண்ணெய் குறைந்த உணவுகள், நெய், கேரட் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
இதயம்: தாமரைத்தண்டு, செம்பருத்தி, பிளாக்ஸ் விதைகள், நல்லெண்ணெய், பாதாம் ஆகியவை நல்லது.
நுரையீரல்: அகத்திக்கீரை, முள்ளங்கி, திராட்சை ஆகியவற்றைச் சாப்பிடலாம்
வயிறு: வெண்பூசணி, நீர் மற்றும் நார்ச்சத்துள்ள உணவுகள், முட்டைகோஸ் போன்றவை நல்லது.
கல்லீரல்: கொத்தமல்லி, நெல்லி, கீழாநெல்லி, சிட்ரஸ் பழங்கள், மோர், கரிசாலை, பச்சை நிறக் காய்கனிகள் ஆகியவை கல்லீரலைச் சுத்தப்படுத்தும்.
மண்ணீரல்: தண்ணீர், காளான், கேரட் ஆகியவை நல்லது.
கணையம்: ஊறவைத்த வெந்தயம், கொய்யா, மாதுளை சாத்துக்குடி ஆகியவை நல்லது.
சிறுநீரகம்: தாமரைத்தண்டு, பயறு வகைகள், பீன்ஸ் வகைகள், சின்ன வெங்காயம், வாழைத்தண்டுச் சாறு, நீர்ச்சத்துள்ள உணவுகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
சிறுகுடல், பெருங்குடல்: ஆவியில் வேகவைக்கப்பட்ட உணவுகள், கீரைகள், இஞ்சி, மோர், ஆன்டிஆக்ஸிடன்ட் நிறைந்த பச்சை, மஞ்சள், சிவப்புக் காய்கனிகள் நல்லது.
கர்ப்பப்பை: கற்றாழை, செம்பருத்திப் பூ, பாதாம், பிளாக்ஸ் விதைகள் ஆகியவற்றைச் சாப்பிடலாம்.
எலும்பு: பால், கேழ்வரகு, சிறுதானியம், கொய்யா, நட்ஸ், எள் சாப்பிடலாம்.
நரம்பு: கசப்புச் சுவைகொண்ட உணவுகள், வாழைப்பழம், மூலிகை ஆகியவை நல்லது.
ரத்தம்: சிவப்பு நிற உணவுகள், பேரீச்சை, காய்ந்த திராட்சை, கேரட் ஜூஸ், சுண்டல் சாப்பிடலாம்.
டீடாக்ஸ் என்பதை மருத்துவ சிகிச்சையாகக் கருதாமல், நம் அன்றாட வாழ்வின் ஒரு பகுதியாக, நமது பழக்கவழக்கங்களில் ஒன்றாக்கிக்கொண்டாலே, நம் உடலும் மனமும் புத்துணர்வாகி, ஆரோக்கியத்துடன் இருக்கும். டீடாக்ஸ் செய்வோம் நம்முள் மலர்ந்து, புத்துணர்வு பெறுவோம்.
super message sir
ReplyDelete