Wednesday 3 February 2016

எழுத்தாளருக்கான யோகநிலை

எழுத்தாளருக்கான யோகநிலை
      
எழுதுதல் ஒருவரால் ஆர்வத்துடன் உருவாக்கப் படுகின்ற இனிய கலை ஆகும். இந்தத் தனித்திறமை அறிவாளிகளுக்கே உரியது. சிறந்த எழுத்தாளர்கள் தங்களின் சமூக அடையாளங்களைத் தங்களின் எழுத்துக்கள் மூலமாக சரித்திரத்தின் பக்கங்களில் விட்டுச் செல்லத் தவறுவது இல்லை. இத்தகைய கலைஞர்கள் எழுத்தாளர்கள், கவிஞர்கள், தத்துவவாதிகள், ஆவர். ஜோதிட விதிகளின்படி ஒருவர் எழுத்தாளர் ஆவதற்கான திறமைகள் அவரிடம் உள்ளனவா ? – என நாம் அனுமானித்துவிட முடியும். கவிஞர்கள் உருவாக்கப்படுவது இல்லை, அவர்கள் இயற்கையாகவே பிறக்கிறார்கள். இனி பெரிய எழுத்தாளர்களுக்கான யோக நிலைகளைப் பார்ப்போம்.

1.   இலக்கியம் எனும் பரிசைத் தருவது இரண்டாமிடம் ஆகும். இரண்டாம் அதிபதி, 5 ஆம் அதிபதியுடன் அல்லது குருவுடன் இணைந்து, இரண்டு அல்லது 5 ஆம் வீட்டில் இருக்க ஒருவர் எழுத்தாளர் ஆகிறார் அல்லது கவிஞர் ஆகிறார்.

2.   பலம் மிக்க குரு ஆத்ம காரகன் ஆக ஜாதகரை அனைத்தும் கற்ற  அறிவாளியாக ஆக்கிவிடுகிறது.  அவருடன் சுக்கிரன் அல்லது சந்திரன் இணைந்தால் ஜாதகர் மிகப் பிரபலமான எழுத்தாளர் அல்லது கவிஞர் ஆவார்.

3.   5 மற்றும் 9 ஆம் அதிபதிகள் தொடர்பு ஒருவரை எழுத்தாளர் ஆக்கும்.

4.   சனி மற்றும் குருவின் தொடர்பு ஒருவரை தத்துவம், ஜோதிடம் மற்றும் மத சம்பந்தமான நூல்களை எழுதும் ஆசிரியர் ஆக்குகிறது.

5.   புத-ஆதித்ய யோகம் ஆழ்ந்த எழுத்துத் திறனை அளிக்கிறது. தனுசு இலக்னமாகி, இந்த யோகமானது சிம்மம் அல்லது கன்னியில் ஏற்பட்டால் எழுத்துத் துறையில் மிகச் சிறந்த பலன்களை எதிர்பார்கலாம்.

6.   பலம்மிக்க புதன் ஆத்மகாரகனாகவும், 5 ஆம் இடத்து அதிபதியாகவும் திகழ ஜாதகர் பல நூல்களை எழுதும் ஆசிரியர் ஆகிறார்.

7.   குரு மற்றும் சந்திரனின் நல்ல இடங்களில் ஏற்படும் கேந்திர பரிவர்த்தனையால் ஏற்படும் கஜகேசரி யோகம் ஒருவருக்கு நல்ல எழுத்துத் திறமையை அளிக்கிறது.

8.   சில நேரங்களில் சனி – சுக்கிரன் அல்லது சனி – புதன் இணைவு எழுத்தார்வத்தைத் தருகிறது.

9.   இலக்னத்துக்கோ அல்லது சந்திராலக்னத்துக்கோ 2 அல்லது 8 ஆம் இடத்தில் சுக்கிரன் இருக்க ஜாதகரை கவிஞன் ஆக்கிவிடுகிறது. எனினும்  9 ஆம் இடம் மற்றும் 9 ஆம் அதிபதி ஆகியோர் பலமானவராக இருக்க வேண்டும்.

10.  சனி ஆத்மகாரகன் ஆகி இலக்னத்துக்கு10 ஆம் இடத்தில் இருக்க சீரிய மற்றும் உயரிய எண்ணங்களைக் கொண்ட எழுத்தாளர் ஆவார்.

11.  5 ஆம் இடத்துக்கு 7 ஆம் இடமான உபஜெய ஸ்தானமான 11 ஆம் இடத்தில் 5 ஆம் அதிபதி இருக்க மிகப் பெரிய இராஜயோகத்தைத் தருகிறது. இது முன்னேற்றத்தையும், வளர்ச்சியையும் தருகிறது. இதன் காரணமாக ஜாதகர் திறமைமிக்க நூலாசிரியர் ஆவதோடு, குழந்தைகளும் சிறப்பாக வளருகின்றனர். ஜாதகர் தனது நுண்அறிவு மூலமாக நல்ல சம்பாத்தியத்தையும் பெறுவார்.

12.  இலக்னத்துக்கோ அல்லது சந்திரா லக்னத்துக்கோ 4 மற்றும் 10 ஆம் இடங்களில் எந்தவொரு கிரகமும் இல்லை எனில் இளமைக்காலத்தில் வெற்றிகள் வந்து சேராது.

13.  5 ஆம் அதிபதி, ஆத்ம காரகனாகி அவருடன் சுக்கிரன் அல்லது குரு அல்லது சந்திரன் தொடர்புற, ஜாதகர் எல்லோராலும் விரும்பப்படுகிற மிகச் சிறந்த எழுத்தாளர் ஆகிறார்.

No comments:

Post a Comment