புத்திரதோஷம் என்பதை 9 வகைகளாகப் பிரிக்கலாம்.
திருமணமாகி, பல ஆண்டுகள் ஆகியும் புத்திர பாக்கியம் இல்லாமை.
ஆண்வாரிசு இல்லாதது.
குழந்தைகள் பிறந்தும் அவர்களால் பெற்றோர்களுக்கு சந்தோஷமோ, அல்லது சுகமோ கிடைக்காது.
இளவயதில் புத்திரர்கள் நோயினால் காலா காலமாக கஷ்டப்படுவது.
புத்திரர்கள் அல்லது புத்திரிகள் ஊனமுற்றவர்களாக பிறப்பது.
புத்திரன், அல்லது புத்திரி பெற்றோர்களை நட்டாற்றில் விட்டுவிட்டு ஓடிப்போவது.
புத்திரர், புத்திரி நல்லபடியாக இருந்தும் பெற்றோரோகள் வயிற்றெரிச்சலை கொட்டிக் கொள்வது, பெற்றோர்களை கொடுமை படுத்துவது.
புத்திரர், புத்திரிகளால், பெற்றோர்கள், சொத்துக்காகவும், வேறு சில விஷயங்களுக்காகவும் கொல்லப்படுவது.
ஆசையோடு வளர்த்துவரும் பிள்ளைகள் நோயின் காரணமாகவும், விபத்தின் காரணமாகவும், நடுவயதில் அகாலமாக உயிர் துறப்பது,
என்று ஒன்பது வகையான புத்திர தோஷங்கள் உண்டு.
இவற்றில் சில தோஷங்கள், சில காலம் வரை நீடிக்கும். பல தோஷங்கள், பல வருஷங்களாக நீடிக்கும். மேலும் சில தொடர்ந்து கடைசிவரை வந்து கொண்டிருக்கும். இத்தனை தோஷங்களையும் தாண்டி குழந்தைகள் பிறப்பது, நல்லபடியாக பிறப்பது, நல்லபடியாக படிப்பது, பெற்றோர்களுக்கும், குடும்பத்தினருக்கும் அனுகூலமாக இருப்பது, நல்ல ஒழுக்கங்களுடன் திகழ்வது, குடும்பத்தின் பெருமையை மேலும் பரப்புவது, போன்ற நற்ச்செயல்கள், நற்குணத்தோடு, குழந்தைகள் பிறக்கத்தான் செய்கின்றார்கள். இது பெற்றோர்கள் செய்த புண்ணியம்.
ஜாதகத்தின் ஐந்தாம் வீட்டில் தோஷங்கள் இருக்காது. ஆனால் அப்படிப்பட்ட தம்பதிகளுக்கு என்ன காரணத்தாலோ குழந்தைகள் பிறக்காது. அப்படியே பிறந்திருந்தாலும், மேற்சொன்ன ஒன்பது வகையான தோஷங்களில் ஏதாவது ஒன்றைப் பெற்றிருப்பார்கள்.
இதற்கு காரணம், சரியானபடி ஜாதகத்தைக் குறிக்கத் தவறியதால் ஏற்பட்ட விளைவு என்பது உண்மை. அதை விட இன்னொரு முக்கியமான காரணம், ஒவ்வொருவருடைய ஜாதகத்தில், ஐந்தாம் இடம், ஒன்பதாம் இடம், பன்னிரெண்டாம் இடத்தில், ராகுவோ, கேதுவோ அல்லது பூர்வ புண்ணிய ஸ்தானத்திற்கு அதிபதியான கிரகம், வேறு கெட்ட கிரகங்களோடு சேர்ந்து அசுபப் பார்வை பார்க்கும் பொழுதும், அவற்றில் தசா, புக்தி, அந்தரம் நடை பெரும் பொழுதும், ஏழரைச்சனி, அஷ்டமச்சனி, அர்த்தாஷ்டமச்சனி, அஷ்டம குரு, சஞ்சரிக்கும் பொழுதும், புத்திரர்கள், புத்திரிகளால், மன சஞ்சலமும், வெறுப்பும், விரக்தியும், நஷ்டமும், வருத்தமும், இழப்பும், ஏற்படும். எனவே ஐந்தாம் வீட்டில் தோஷம் இல்லாவிட்டாலும், நிறைய பேர்களுக்கு, குழந்தைகளால் மனக்கஷ்டம் எர்ப்பட்டுக் கொண்டிருக்கும்.
இப்படிப்பட்ட தோஷங்கள் விலகுவதற்கு, பரிகாரங்கள் நிறைய உண்டு. அவற்றை பண வசதி உடையவர்கள் எளிதாகச் செய்து விடுவார்கள். சாதாரண மக்களும் சரி, பணவசதி இல்லாதவர்களுக்கும் வேறு என்ன மாற்றுவழி? என்று கேட்டால், அவர்கள் இதற்கு என்று அமைந்துள்ள கோயில்களுக்குச் சென்று சில பரிகாரங்களை முறைப்படி செய்யலாம்.
மன்னார்குடி:-இந்த கோவில் மிகப் பழமையானதாக இருந்தும், ஆழ்வார்களால் பாடப் படவில்லை. என்றாலும், இந்த ராஜகோபால சுவாமிக்கு பதினாறு வகையான அபிஷேகங்களை வளர்பிறை புதன் கிழமை அன்றோ, அல்லது தம்பதிகளில் யாரேனும் ஒருவருடைய ஜென்மநட்சத்திரம் வரும் நாள் அன்று செய்துவிட்டால், மலையளவு பிரச்சினை, கடுகளவாகி மெல்ல மெல்ல மறைந்து விடும்.
திருக்கருக்காவூர்:- பெரும்பாலும் இந்த கோவிலை பற்றி கேள்விப் படாத நபர்கள் யாரும் தமிழ்நாட்டில் இருக்கவே முடியாது. குழந்தைப் பேற்றுக்காக மட்டும் செல்வதோடு அல்லாமல், குழந்தைக்குரிய ஒன்பது தோஷங்களும் வராமல் காப்பாற்றவும் இங்கு செல்வது நல்லது. இது கும்பகோணத்திற்கு அருகில் உள்ளது.
நாமக்கல்:- சேலத்திலிருந்து சுமார் 45 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள இந்த ஊரில் பிரசித்தி பெற்ற அனுமனுக்கு, முடிந்த அளவு வெண்ணை சார்த்தியோ, துளசி மாலை அணிவித்தோ, திருமஞ்சனம் செய்தாலோ, புத்திர தோஷம் பெரும்பாலும் விலகும். வசதி இருந்தால் வடை மாலை கூட சாற்றலாம்.
கோடகநல்லூர்:- இது திருநெல்வேலி-தென்காசி செல்லும் பாதையில், நடுக்கல்லூருக்கு மிக அருகாமையில் உள்ளது. இங்கு சென்று பச்சை வண்ணப் பெருமாளுக்கு அமிர்த கலசம் நைவேத்தியம் செய்வது புத்திர தோஷத்திற்குரிய, மிகச் சிறந்த பரிகாரமாகும். இத் திருத்தலம் சர்ப்ப தோஷம் என்கிற "கால சர்ப்ப தோஷத்திற்கு" மிகச் சிறந்த பரிகார ஸ்தலமும் கூட. சந்ததி விருத்தி, தடைபட்ட, தள்ளிப் போகும் திருமணம், வியாபாரத்தில் வரும் நஷ்டம், இழப்பு, புத்திர புத்திரிகளின் ஆரோக்கியம், நற்குணம் இவைகளுக்கு சிறந்த பரிகார ஸ்தலம்.
காளஹஸ்தி:- திருப்பதி செல்பவர்களுக்கு, இந்த கோவிலைப் பற்றி நன்றாக தெரிந்திருக்கும். அற்புதமான ராகு, கேது பரிகார ஸ்தலம். பாதாள விநாயகருக்கு அர்ச்சனை செய்து, விளக்கேற்றி வருவது, அம்பாளுக்கு பால், இளநீர் அபிஷேகம் செய்வது புத்திர தோஷத்திற்குரிய பரிகாரமாகும்.
திருநாகேஸ்வரம்:- இங்கு குடிகொண்டிருக்கும், ராகு பெருமானுக்கு, ராகு காலத்தில் பாலாபிஷேகம் செய்வது, புத்திரபாக்கியம், புத்திரர்களால் சந்தோஷம், பெருமை, கெளரவம், அந்தஸ்து ஆகியவற்றை அள்ளித்தரும்.
குருவாயூர்:- கேரளத்தில் உறையும், இந்தக் கோயிலுக்குச் சென்று, அவரவர் சக்திக்கு ஏற்ப, என்னென்ன வழிகளில், பிரார்த்தனையோ, துலாபாரமோ செய்துவரின், குழந்தையின் ஆரோக்கியம், எதிர்காலம் சிறப்பாக அமையும். இங்கு செல்ல முடியாதவர்கள், வேண்டிக் கொண்டு காணிக்கையை அனுப்பி வைக்கலாம்.
மண்ணார்சாலை:- இது கேரள மாநிலத்தில், ஹரிப்பாடு என்கிற ஊருக்கு அருகில் உள்ளது. குழந்தைகள் சம்பந்தமான அனைத்துப் பிரச்சினைகளுக்கும், தீர்வுகாணும் புண்ணியத்தலம். நேரிடையாக சென்று வருவதுதான் சிறந்த பரிகாரமாகும்.
No comments:
Post a Comment