Wednesday, 25 May 2016

விநாயகர் வழிபாட்டுமுறை

விநாயகர் வழிபாட்டுமுறை

விநாயகரை வழிபடும் போது மிகவும் பணிவுடன் உடலைச் சாய்த்து நின்று முதலில் கைகளால் தனது நெற்றியின் இருபொட்டுகளிலும் குட்டிக்கொள்ளவேண்டும்.

பின் வலது காதை இடது கையாலும், இடது காதை வலது கையாலும் பிடித்து மூன்று முறை தோப்புக் கரணம் போட வேண்டும்.

தேங்காயை சிதறு காயாக உடைத்து நமது தீவினைகளை சிதறச் செய்ய வேண்டுமென பணிவாக கேட்க வேண்டும்.

அருகம்புல் மாலை அணிவித்து நெய்தீபம் காட்டி வணங்கி மூன்று முறை வலம் வரவேண்டும்.

#தலையில் குட்டிக்கொள்ளுதல்

அகத்தியர் வடநாட்டில் இருந்து தென்இந்திய நாட்டிற்கு வந்து கொண்டிருந்த போது அவர் கமண்டலத்தில் கொண்டு வந்த கங்கை நதி நீரை காகம் வடிவில் வந்து விநாயகர் கவிழ்த்தார்.

பின்னர் அந்தணச் சிறுவன் வடிவில் விநாயகர் அகத்தியர் முன் வந்து நின்றார். கோபம் கொண்ட அகத்தியர் விநாயகரின் தலையில் குட்டினார்.

அப்போது விநாயகர் சுயரூபம் எடுத்து உலக நன்மை காக்க காவிரியை உருவாக்க அப்படி செய்ததாகக் கூறினார்.

தன் தவறுக்கு வருந்திய அகத்தியர் தன் தலையிலேயே குட்டிக் கொண்டார். அன்று முதல் விநாயகர் வழிப்பாட்டில் தலையில் குட்டிக்கொள்ளும் வழக்கம் வந்தது.

நெற்றியின் இரு பொட்டுகளிலும் குட்டிக்கொள்வதால் மூளையில் உள்ள பிட்யூட்டரி சுரப்பி நன்கு சுரக்கும்.

#தோப்புக்கரணம் போடுதல்

கஜமுகாசுரன் என்ற அசுரன் தேவர்களை அடிமைப்படுத்தி தோப்புக்கரணம் போட வைத்தான். விநாயகர் அசுரனை அழித்து தேவர்களைக் காத்தார்.

அதனால் தேவர்கள் விநாயகரை பயபக்தியுடன் தோப்புக்கரணம் போட்டு வழிப்பட்டனர். அது முதல் அதுவே விநாயகர் வழிபாட்டில் ஒன்றானது.

தோப்புக்கரணம் போடுவது மூட்டு மற்றும் கால்களுக்கு வலிமை உண்டாகும்.

#சிதறுகாய் உடைத்தல்

காசியப முனிவரின் மகனாக விநாயகர் மகோற்கடர் என்ற பெயரில் அவதரித்தார். ஒரு நாள் யாகத்திற்கு சென்ற போது அசுரன் ஒருவன் அவர்களைத் தடுத்து நிறுத்தினான்.

விநாயகர் யாகத்திற்கு கொண்டு சென்ற கலசங்களின் மீதிருந்த தேங்காய்களை அசுரன் மீது வீசி அவனை பொடிப்பொடியாக்கினார்.

தனக்கு வந்த தடையைத் தேங்காய் வீசி எறிதன் மூலம் தகர்த்ததால், நமக்கு வரும் தீவினைகளும் சிதற சிதறுகாய் உடைத்து விநாயகரை வழிபடும் முறை உருவானது.

#அருகம்புல் மாலை

அனலாசுரன் என்ற அசுரன் மக்களை மிகவும் துன்புறுத்தி வந்தான். தன்னை எதிர்ப்பவர்களை அனலாய் மாற்றி எரித்து விடுவான்.

விநாயகர் மக்களைக் காக்கும் பொருட்டு அனலாசுரனுடன் போரிட்டார். ஆனால் அவனை வெற்றி கொள்ள முடியவில்லை.

எனவே கோபத்தில் அவனை விழுங்கிவிட்டார். வயிற்றுக்குள் சென்ற அசுரன் அனலைக் கக்கினான்.

விநாயகரை குளிர்விக்க குடம்குடமாக கங்கை நீர் அபிஷேகம் செய்யப்பட்டது. ஆனால் வயிற்றெரிச்சல் அடங்கவில்லை.

உடனே முனிவர் ஒருவர் அருகம்புல்லை தலையில் வைத்து வழிபட்டார். விநாயகரின் எரிச்சல் அடங்கியது.

அது முதல் அருகம்புல் விநாயகர் வழிபாட்டில் இன்றியமையாதது ஆகிவிட்டது.

No comments:

Post a Comment