Friday, 1 November 2019

தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்


தனுசு - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எல்லோரும் பயந்து பின்வாங்கும் செயல்களைத் தானாக முன்வந்து தைரியமாகச் செய்யும் ஆற்றலுடைய நீங்கள், தன்னை நாடி வருபவர்களுக்கு மறுக்காமல் உதவுபவர். எப்போதும் நியாயத்துக்காகப் போராடும் நீங்கள், மனசாட்சியை முக்கிய சாட்சியாக நினைப்பீர்கள்.

உங்களின் ராசிக்கு 12 - ம் வீட்டில் அமர்ந்து உங்களுக்கு வீண் அலைச்சல், விரயச் செலவுகளைத் தந்துகொண்டிருந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்கள் ராசிக்குள் நுழைந்து ஜன்ம குருவாக ஆட்சி பெற்று அமர்வதால் பொறுப்புகளும், வேலைச்சுமையும் அதிகரிக்கும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் ஆதரிப்பார்கள்.
ஜன்ம குருவாக இருப்பதால் அவ்வப்போது முன்கோபம் வரும். ரத்த அழுத்தம் அதிகமாக வாய்ப்பிருப்பதால், உணவில் உப்பைக் குறையுங்கள். வெளி உணவுகளைத் தவிர்ப்பது நல்லது.

உங்களின் குடும்ப விஷயத்தில் மற்றவர்கள் தலையிட அனுமதிக்காதீர்கள். கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. பிள்ளைகளின் எதிர்பார்ப்புகள் அதிகமாகிக் கொண்டேப் போகும்.

யாருக்கும் பணம், நகை வாங்கித் தருவதில் முன்னால் நிற்க வேண்டாம். உங்கள் இயல்புக்கு மாறான நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்பி முடிவுகள் எடுக்க வேண்டாம்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்கள் ராசிக்கு 5 - ம் வீட்டைப் பார்ப்பதால் குழந்தைபாக்கியம் சிலருக்குக் கிடைக்கும். பூர்வீக சொத்துப் பிரச்னைகள் கொஞ்சம் கொஞ்சமாகத் தீரும். சிலர் தங்களின் பங்கை விற்று நகரந்துக்கு வெளியே இடம் வாங்குவீர்கள்.

தியானம், பொதுச்சேவையில் மனம் ஈடுபாடு கொள்ளும். மகளுக்கு நல்ல வரன் அமையும். குரு 7 - ம் வீட்டைப் பார்ப்பதால் தள்ளிப்போன திருமணம் கை கூடி வரும். போட்டிகளில் வெற்றிபெறுவீர்கள். கணவன், மனைவிக்குள் சச்சரவு இருந்தாலும் பாசம் குறையாது.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால், வேலைச்சுமை அதிகரிக்கும். உங்களின் பேச்சில் அனுபவ அறிவு வெளிப்படும். எதிர்பார்த்தவை தாமதமானாலும், எதிர்பாராத சில வேலைகள் விரைந்து முடியும்.

சுற்றியிருப்பவர்களின் சுயரூபத்தை உணர்வீர்கள். சிலர் சொந்தமாக தொழில் தொடங்குவீர்கள். யோகா, தியானத்தில் மனம் லயிக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சஷ்டமாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் உங்களின் செயலில் வேகம் கூடும். எதிரிகளை வீழ்த்துவீர்கள். பழைய கடன் பிரச்னை கட்டுக்குள் வரும். வீடு, வாகன வசதி பெருகும். பணப்புழக்கம் அதிமாகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் பாக்கியாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் உங்களுடைய நிர்வாகத் திறன், ஆளுமைத் திறன் அதிகரிக்கும். அரசால் அனுகூலம் உண்டு. தந்தையின் ஆரோக்கியம் சீராகும்.

மகரத்தில் குரு பகவான்:
28.3.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 2 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் திடீர் யோகம், பணவரவு, மகிழ்ச்சியெல்லாம் உண்டாகும். குடும்பத்தில் நிலவி வந்த கூச்சல், குழப்பங்கள் விலகும். கட்டட வேலைகளைத் தொடங்குவீர்கள். வங்கிக் கடனுதவியும் கிட்டும்.

குருபகவானின் வக்ர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் எதிர்பார்ப்புகள் தடையின்றி நிறைவேறும். வழக்கில் வெற்றிபெறுவீர்கள். ஊர் பொது காரியங்களை முன்னின்று நடத்துவீர்கள்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் கணவன், மனைவிக்குள் வீண் வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. வெளிவட்டாரத்தில் மறைமுக எதிர்ப்புகள் அதிகமாகும். புது பதவிகளை யோசித்து ஏற்பது நல்லது.

வியாபாரத்தில் ஆழம் தெரியாமல் காலை விடாதீர்கள். புதிதாக வரும் போட்டியாளர்களுக்கு ஈடுகொடுக்க முடியாமல் திணறுவீர்கள். புதிய முடிவுகளோ, முதலீடுகளோ வேண்டாம். பழைய சரக்குகளைப் போராடி விற்பீர்கள். கடையை அவசரப்பட்டு வேறு இடத்துக்கு மாற்ற வேண்டாம். இருக்கின்ற இடத்திலேயே தொடர்வது நல்லது. தெரியாத தொழிலிலும் இறங்க வேண்டாம். கூட்டுத்தொழில் வேண்டாம்.

உத்தியோகத்தில் நாளுக்கு நாள் வேலைச்சுமை கூடிக்கொண்டே போகும். அலுவலக ரகசியங்களை வெளியே சொல்லவேண்டாம். உங்களின் திறமையை பயன்படுத்தி வேறு சிலர் முன்னேறுவார்கள். குறைகளை நேரடி அதிகாரி சுட்டிக் காட்டினால் திருத்திக்கொள்ளுங்கள். முறைப்படி தேர்வெழுதி வெற்றிபெற்றும் பதவி உயர்வு, சலுகைகள், சம்பள உயர்வைப் பெற போராட வேண்டி இருக்கும்.

மாணவ, மாணவிகள் டி.வி., சினிமாவையெல்லாம் விட்டுவிட்டுப் படிப்பில் முழுகவனம் செலுத்துங்கள். மறதியால் மதிப்பெண் குறையும் வாய்ப்புள்ளதால் ஒருமுறைக்கு இருமுறை எழுதிப் பழகுங்கள். அறிவியல், கணித சூத்திரங்களையெல்லாம் எழுதிப் பார்ப்பது நல்லது.

பெண்கள் யதார்த்தமாகவும், விளையாட்டாகவும் எதையோ சொல்லப் போய் அதைச் சிலர் பெரிதாக்கிக் கொள்ள வாய்ப்பிருக்கிறது. பெற்றோரின் ஆலோசனைகள் இப்போது கசப்பாக இருந்தாலும் பின்னர் அது சரியானது தான் என்பதை உணர்வீர்கள்.

கலைத்துறையினர் விமர்சனங்களை ஏற்று திருத்திக்கொள்ளுங்கள். உங்களின் படைப்புகளைப் போராடி வெளியிட வேண்டி வரும்.
இந்த குரு மாற்றம் ஆரோக்கிய குறைவையும் வேலைச்சுமையையும் தந்தாலும் அனுபவ அறிவையும், தன்னை தானே உணரும் சக்தியையும் தரும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூர் அருகிலுள்ள திருப்புல்லிவனம் ஸ்ரீவியாக்ரபுரீஸ்வரர் சிவனாலயத்தில் உள்ள குரு பகவானை வியாழக்கிழமையில் சென்று வணங்குங்கள். ஏழை கர்ப்பிணிப் பெண்ணின் பிரசவச் செலவை ஏற்றுக் கொள்ளுங்கள். வளங்கள் பெருகும்.


விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


விருச்சிகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

விவேகமான சிந்தனையும், வேடிக்கையான பேச்சும், விநோதப் போக்கும்கொண்ட நீங்கள், சமயோஜிதம் மிக்கவர்கள். தன்மானம், சுயமரியாதைக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நீங்கள் தயவு, தாட்சண்யம் அதிகம் பார்ப்பீர்கள். ஆனால், விமர்சனங்களைத் தாங்கிக் கொள்ளமாட்டீர்கள். இதுவரையில் உங்களின் ராசியில் ஜன்ம குருவாக அமர்ந்து வாழ்க்கை மீது ஒருவித வெறுப்பையும், சலிப்பையும் தந்திருப்பார்.

குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை உங்களின் ராசியை விட்டு விலகி, தன் சொந்த வீடான 2 - ம் வீட்டில் அமர்வதால் எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். குடும்பஸ்தானத்தில் குரு பகவான் அமர்வதால் இனி மகிழ்ச்சியான சூழ்நிலை உண்டாகும். பிரிந்திருந்த கணவன், மனைவி ஒன்று சேருவீர்கள். திருமணம், சீமந்தம், கிரகப்பிரவேசம் போன்ற சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

உறவினர்கள் வலிய வந்து பேசத் தொடங்குவார்கள். உடல்நலம் சீராகும். சோர்ந்திருந்த நீங்கள் இனி உற்சாகமடைவீர்கள். பெரிய மனிதர்கள், பிரபலங்களின் நட்பு கிடைக்கும். மனைவிவழி உறவினர்கள் மதிக்கும்படி நடந்துகொள்வீர்கள். தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். மகளுக்கு நல்ல இடத்தில் வரன் அமையும். மகனுக்கு எதிர்பார்த்த நிறுவனத்தில் வேலை கிடைக்கும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 6 - ம் வீட்டைப் பார்ப்பதால் கடன் பிரச்னை கட்டுப்பாட்டுக்குள் வரும். குரு 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் வெளிநாடு செல்வீர்கள். பங்குச் சந்தையில் பணம் வரும். குரு 10 - ம் வீட்டைப் பார்ப்பதால் பெரிய பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள். உங்களிடம் பணம் வாங்கிக் கொண்டு ஏமாற்றியவர்கள், திருப்பித் தருவார்கள். தூரத்து சொந்தங்கள் மற்றும் பால்ய சிநேகிதர்கள் உதவுவார்கள். வாழ்வின் முன்னேற்றத்துக்கு காரணமான ஒருவரைச் சந்திப்பீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் விரயாதிபதியும் சப்தமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் திடீர் பயணங்கள், செலவினங்கள் உண்டு. பழைமை வாய்ந்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள். வெளிவட்டாரத் தொடர்புகள் விரிவடையும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் ஜீவனாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் உங்களின் மதிப்பு, மரியாதை கூடும். வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். கௌரவப் பதவிகளுக்குத் தேர்ந்தெடுக்கப்படுவீர்கள். என்றாலும், வேலைச்சுமையும் இருந்துக்கொண்டேயிருக்கும்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 3 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் இனந்தெரியாத சின்னச்சின்ன கவலைகள் வந்து போகும். இளையசகோதர வகையில் மனத்தாங்கல் வரலாம். வாக்குவாதங்களைத் தவிர்ப்பது நல்லது.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் வேலைப்பளு அதிகரிக்கும். ஆனாலும் தடைப்பட்ட காரியங்கள் முடியும். அதிகாரமுள்ள பதவியில் இருப்பவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் வீண்வாக்குவாதம் செய்யவேண்டாம்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் சமயோஜித புத்தியால் எதையும் சாதிப்பீர்கள். மனைவிக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். அவரின் ஆதரவுப் பெருகும். மனைவிவழிச் சொத்து கைக்கு வரும். புதிய டிசைனில் நகை வாங்குவீர்கள். உங்கள் ரசனைக்கேற்ப வீடு, வாகனம் அமையும்.

வியாபாரத்தில் கடந்த ஓராண்டு காலமாக ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்வீர்கள். இரட்டிப்பு லாபம் உண்டு. புது வாடிக்கையாளர்களின் வருகையால் உற்சாகமடைவீர்கள். சொந்த இடத்துக்குச் சிலர் கடையை மாற்றி அழகுபடுத்துவீர்கள். சிலர் சில்லறை வியாபாரத்திலிருந்து மொத்த வியாபாரத்துக்கு மாறுவார்கள். சங்கம், இயக்கம் இவற்றில் கௌரவப் பதவிகள் தேடி வரும். ஹார்டுவேர், இரும்பு, வாகனம், மூலிகை வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் இனி, உங்கள் உழைப்புக்கு ஒரு அங்கீகாரம் கிடைக்கும். உயரதிகாரிகளின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். இதுநாள் வரை உங்களை ஒதுக்கியவர்களே முக்கியத்துவம் தருவார்கள். கண்டும் காணாமல் சென்று கொண்டிருந்த சக ஊழியர்களும் மதிக்கத் தொடங்குவார்கள். எதிர்பார்த்த சம்பள உயர்வு, பதவி உயர்வு கிடைக்கும்.

மணமாகாத பெண்களுக்கு கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாகும். நேர்முகத் தேர்வில் வெற்றிபெற்று புதிய வேலையில் அமர்வார்கள். மொழி அறிவுத்திறனை வளர்த்துக்கொள்வீர்கள். பெற்றோரின் அரவணைப்பு உண்டு.

மாணவ மாணவிகளுக்கு நினைவாற்றல் கூடும். படிப்பில் இருந்த அலட்சியப்போக்கு மாறும். கூடுதல் மதிப்பெண்கள் பெறுவீர்கள். வகுப்பறையில் சக மாணவர்கள் பாராட்டும்படி நடந்துகொள்வீர்கள்.

கலைத்துறையினருக்குப் போட்டிகள் குறையும். தடைப்பட்டிருந்த உங்களின் படைப்புகள் வெளியாகும். மக்கள் மத்தியில் பிரபலமடைவீர்கள். வருமானம் உயரும்.
இந்த குரு பெயர்ச்சி தொட்டதையெல்லாம் துலங்க வைப்பதுடன் அடிப்படை வசதிகளையும் அதிகப்படுத்தும்.

பரிகாரம்: உங்களின் இல்லத்துக்கு அருகிலுள்ள குன்றில் இருக்கும் முருகப்பெருமானை கிருத்திகை நட்சத்திரம் நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பிள்ளைகளால் கைவிடப்பட்ட முதியோருக்கு உதவுங்கள். வளம் பெருகும்.


துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


துலாம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எந்த ஊருக்குப் பிழைக்கச் சென்றாலும் நீங்கள் சொந்த ஊரை மறக்காதவர். தோல்வி என்பது வெற்றிக்கான ஏணிப்படிதான் என்பதை உணர்ந்த கடின உழைப்பாளி. உங்களின் தனஸ்தானமான 2 - ம் வீட்டில் அமர்ந்து பணப்புழக்கத்தையும், சமூகத்தில் அந்தஸ்தையும், வசதி, வாய்ப்புகளையும், குடும்பத்தில் மகிழ்ச்சியையும் தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்வதால் எதையும் திட்டமிட்டு செய்யுங்கள்.

எந்த ஒரு வேலையையும் முதல் முயற்சியிலேயே முடிக்க முடியாமல் இரண்டு, மூன்று முறை போராடி முடிக்க வேண்டி வரும். இளைய சகோதரரின் வகையில் பிணக்குகள் வரும். வீண் வறட்டு கௌரவத்துக்காக சேமிப்பைக் கரைத்துக்கொண்டிருக்காதீர்கள். யாருக்காகவும் ஜாமீன் கையெழுத்திட வேண்டாம். திடீரென்று அறிமுகமாகுபவரை நம்ப வேண்டாம்.

கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதங்கள் செய்யவேண்டாம். அன்பும், அன்யோன்யமும் அதிகரிக்கும். மற்றவர்களை நம்பி முக்கிய விஷயங்களை ஒப்படைக்காமல், நீங்களே நேரடியாகச் சென்று முடிப்பது நல்லது. தங்க நகைகளைக் கவனமாகக் கையாளுங்கள்.
அக்கம்பக்கம் வீட்டாருடன் எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்ளவேண்டாம்.

சிலர் உங்களை நேரில் பார்க்கும்போது நல்லவர்களாகவும், பார்க்காத போது உங்களைப் பற்றி வேறுமாதிரியாகவும் பேசுவார்கள். கவனமாகப் பழகுங்கள். உறவினர்கள், நண்பர்களிடம் அதிக உரிமை எடுத்துக்கொள்ளவேண்டாம். இடைவெளி விட்டு பழகுவது நல்லது.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 7 - ம் வீட்டைப் பார்ப்பதால் மனைவிவழியில் உதவிகள் உண்டு. குரு 9 - ம் வீட்டைப் பார்ப்பதால் பணவரவுக்கு குறைவிருக்காது. தந்தைவழிச் சொத்துகள் கைக்கு வரும். குரு லாப வீட்டைப் பார்ப்பதால் மூத்த சகோதரர் ஆதரவாக இருப்பார். புது வாகனம் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். தீராத பிரச்னைகளுக்குத் தீர்வு கிடைக்கும். போட்டித் தேர்வுகளில் வெற்றிபெறுவீர்கள். அயல்நாடு செல்ல விசா கிடைக்கும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் ராசியாதிபதியும் அஷ்டமாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு செல்வதால் திடீர் பணவரவு உண்டு. வாகனம் வாங்குவீர்கள். உறவினர்களின் திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள். மனைவி வழியில் உதவிகள் கிடைக்கும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் லாபாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் எதையும் சாதிக்கும் தன்னம்பிக்கை மனத்தில் பிறக்கும். சமூகத்தில் அந்தஸ்து உயரும். அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். சி.எம்.டி.ஏ., ப்ளான் அப்ரூவல் கிடைக்கும். விருந்தினர்களின் வருகையால் வீடு களைகட்டும்.

மகரத்தில் குருபகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 4 -ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் தாயாரின் உடல் நலனில் கவனமாக இருங்கள். தாய்வழி உறவினர்களால் அலைச்சல், செலவுகள் இருக்கும்.

குரு பகவானின் வக்ர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் எதிலும் நிதானித்துச் செயல்படுவது நல்லது. அரசு வகை விவகாரங்களில் அலட்சியமாக இருக்கவேண்டாம்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் உங்களின் ரசனை மாறும். எதிலும் ஒரு தெளிவு பிறக்கும். ஆரோக்கியம் சீராகும். வீடு, வாகனத்தைச் சீர்செய்வீர்கள். சுற்றுலாதலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

வியாபாரத்தில் சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்து கொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். பழைய பாக்கிகளை போராடி வசூலிப்பீர்கள். தரமானப் பொருட்களை விற்பனை செய்வதன் மூலமாக புது வாடிக்கையாளர்கள் வருவார்கள். கட்டட உதிரிப் பாகங்கள், ஸ்டேஷனரி, பெட்ரோகெமிக்கல், டிராவல்ஸ் வகைகளால் ஆதாயமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சின்னச்சின்ன அலைக்கழிப்புகள் இருக்கும். பணிகளைப் போராடி முடிக்கவேண்டி வரும். சக ஊழியர்களின் கடின உழைப்பால் தடைப்பட்ட வேலைகளை முடித்துக் காட்டுவீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். உயரதிகாரியின் பாராட்டைப் பெறுவீர்கள். இடமாற்றம் சாதகமாகும்.

பெண்களுக்குத் தடைப்பட்ட உயர்கல்வியைத் தொடரும் வாய்ப்பு கிடைக்கும். நல்ல இடத்தில் வரன் அமையும். பெற்றோருடன் இருந்த மனத்தாங்கல் நீங்கும். போட்டித்தேர்வுகளில் வெற்றிபெற்று வேலையில் அமருவீர்கள்.

மாணவ, மாணவிகள் விரும்பிய நிறுவனத்தில் எதிர்பார்த்த கல்விப் பிரிவில் சேருவீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச்சின்ன தவறுகளையும் திருத்திக்கொள்ளுங்கள். நட்புவட்டம் விரிவடையும். ஆசிரியரிடம் தயங்காமல் உங்களின் சந்தேகங்களைக் கேட்டுத் தெளியுங்கள்.

:
கலைத்துறையினருக்குப் பெரிய வாய்ப்புகள் தேடி வரும். யதார்த்தமான உங்களின் படைப்புகளுக்கு பாராட்டுகள் கிடைக்கும்.
இந்த குரு மாற்றம் சிறுசிறு தடைகளையும், தடுமாற்றங்களையும் தந்தாலும் இடையிடையே வெற்றியையும், மகிழ்ச்சியையும் தரும்.

பரிகாரம்: விழுப்புரம் மாவட்டம் தீவனூர் என்னும் ஊரில் அருள்பாலித்துக்கொண்டிருக்கும் அருள்மிகு நெற்குத்தி விநாயகரை சங்கடஹர சதுர்த்தியன்று சென்று வழிபடுவது நன்மை தரும்.