Friday, 1 November 2019

கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்


கன்னி- குரு பெயர்ச்சிப் பலன்கள்

கனவிலும், கற்பனையிலும் மாறிமாறி சஞ்சரிக்கும் நீங்கள் நிஜத்தைத் தேடி அலைவீர்கள். பேதம் பார்க்காமல் எல்லோரிடமும் சமமாகப் பழகும் நீங்கள், பலரையும் வழிநடத்திச் செல்லும் அளவுக்குப் பட்டறிவு கொண்டவர்கள். விட்டுக்கொடுக்கும் மனம்கொண்ட நீங்கள், எல்லோரையும் அன்பால் அரவணைப்பவர்.

உங்களின் ராசிக்கு 3 - ம் வீட்டில் அமர்ந்துகொண்டு உங்களின் புதிய முயற்சிகளை முடக்கி வைத்து எந்த ஒரு வேலையையும் முதல் கட்டத்திலேயே முடிக்க முடியாமல் அலைக்கழித்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 4 - ம் வீட்டில் அமர்வதால் சந்தர்ப்ப, சூழ்நிலையறிந்து செயல்படும் சாமர்த்தியத்தைக் கற்றுக் கொள்வீர்கள்.
உங்களின் பலம் எது, பலவீனம் எது என்பதைத் தெரிந்துகொள்வது நல்லது. கணவன், மனைவிக்குள் சிலர் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சி செய்வார்கள். 'உன் சொந்தம், என் சொந்தம்' என்று மோதிக் கொள்ளாமல் ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துப் போங்கள்.. எதிலும் உணர்ச்சிவசப்படாமல் அறிவுப்பூர்வமாக முடிவெடுங்கள்.

வீடு, மனை வாங்கும் போது தாய் பத்திரம், வில்லங்க சான்றிதழ்களையெல்லாம் சரிபார்த்து வாங்குங்கள். சொத்து விற்பதாக இருந்தால், ஒரே தவணையில் பணத்தை வாங்கப் பாருங்கள். ஒருபக்கம் பணவரவு உண்டு என்றாலும் சேமிக்க முடியாதபடி செலவுகளும் துரத்திக் கொண்டேயிருக்கும். தாய்வழி உறவினர்களுடன் இருந்துவந்த கருத்து வேறுபாடுகள் நீங்கும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு உங்களின் ராசிக்கு 8 - ம் வீட்டைப் பார்ப்பதால் அயல்நாடு செல்ல விசா கிடைக்கும். பயணங்களால் பயனுண்டு. மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த வாய்ப்புகள் வரும். குரு உங்கள் உத்தியோகஸ்தானத்தைப் பார்ப்பதால் சிலருக்குப் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். சம்பள பாக்கி கைக்கு வரும். குரு 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் புகழ் பெற்ற புண்ணியஸ்தலங்கள் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் எதிலும் நாட்டமின்மை, ஏமாற்றங்கள், திடீர் செலவுகள் வரலாம். முன்னெச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

மகான்கள், சித்தர்களின் அறிமுகம் கிடைக்கும். குடும்பத்தினருடன் சென்று குலதெய்வப் பிரார்த்தனையை நிறைவேற்றுவீர்கள்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் தனம் மற்றும் பாக்யாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், இக்காலக்கட்டத்தில் எதிர்பார்த்த பணம் கைக்கு வரும்.
கனிவாகப் பேசி காரியம் சாதிப்பீர்கள். வெள்ளிச் சாமான்கள் வாங்குவீர்கள். தடைப்பட்ட கல்யாணப் பேச்சுவார்த்தை சாதகமாக முடியும். குடும்பத்தில் மகிழ்ச்சிகரமான சம்பவங்கள் நிகழும்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் விரயாதிபதியான சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் அறிவுப்பூர்வமாக சில முடிவுகள் எடுப்பீர்கள்.
அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். வீட்டை விரிவுபடுத்தி கட்டுவீர்கள்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிக்கு 5 வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் மனஇறுக்கங்கள் குறையும். குடும்பத்தில் அமைதி உண்டாகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.
அரைகுறையாக நின்ற வீடு கட்டும் பணியைத் தொடங்குவீர்கள். திருமணம் தள்ளிப்போனவர்களுக்கு கை கூடி வரும். மகனுக்கு அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நீண்ட காலமாக செல்ல வேண்டுமென்று நினைத்திருந்த அண்டை மாநிலப் புண்ணிய ஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பழைய பிரச்னைகளுக்கு மாறுபட்ட அணுகுமுறையால் தீர்வு காண்பீர்கள். மேல்மட்ட அரசியல்வாதிகள் உதவுவார்கள். பயணங்களால் உற்சாகமடைவீர்கள். தொலைநோக்குச் சிந்தனை அதிகரிக்கும்.
31.7.2020 முதல் 10.9.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், கொஞ்சம் வளைந்துக் கொடுத்துப்போவது நல்லது. கணவன், மனைவிக்குள் வீண்வாக்குவாதத்தைத் தவிர்ப்பது நல்லது. உடல்நலனில் கவன்ம் செலுத்துங்கள். புதியவர்களால் பணவரவு உண்டு.

வியாபாரத்தில் ஏற்றஇறக்கங்கள் இருந்துகொண்டேயிருக்கும். அவ்வப்போது மாறி வரும் சந்தை நிலவரத்துக்கேற்ப முதலீடு செய்து லாபம் ஈட்டப்பாருங்கள். விளம்பர யுக்திகளை கையாளுங்கள். ரியல் எஸ்டேட், உணவு, துணி வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் வேலைச்சுமை அதிகரிக்கும். உயர் அதிகாரிகளின் உத்தரவுகளை உடனே செயல்படுத்துங்கள்.கூடுதல் நேரம் ஒதுக்கி நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். சக ஊழியர்கள் உதவிகரமாக இருப்பார்கள். அடிக்கடி இடமாற்றம் வரும். எதிர்பார்த்த சலுகைகளும், சம்பள உயர்வும் தாமதமாக கிடைக்கும்.

விரும்பிய கல்வி நிறுவனத்தில் விரும்பிய கல்விப் பிரிவில் சேர்வீர்கள். அறிவாற்றல் கூடும். சின்னச் சின்ன தவறுகளைத் திருத்திக்கொள்ளுங்கள். நட்பு வட்டம் விரிவடையும். சந்தேகங்களை உடனுக்குடன் ஆசிரியர்களிடம் கேட்டுத் தெளிவு பெறுங்கள்

பெண்களுக்கு திருமணம் கை கூடி வரும். பெற்றோரின் முடிவுகளை ஏற்றுக்கொள்ளுங்கள். சிலருக்கு வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வியிலும் முன்னேற்றம் உண்டு.

மாணவ, மாணவிகள் தொடக்கத்திலிருந்தே படிப்பில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தின் கல்விப் பிரிவில், சேர அதிகம் செலவு செய்யவேண்டி வரும். பொது அறிவை வளர்த்துக் கொள்ளுங்கள். விளையாட்டுப் போட்டிகளில் வெற்றி பெறுவீர்கள்.

கலைத்துறையினரின் கற்பனைத்திறன் வளரும். அவர்களின் படைப்புகளுக்கு காப்புரிமை செய்து கொள்வது நல்லது. மூத்த கலைஞர்களின் ஆதரவு முன்னேற்றம் தரும்.
இந்த குரு மாற்றம் அவ்வப்போது ஏமாற்றங்களையும் இடமாற்றங்களையும் தந்தாலும் கடினஉழைப்பால் முன்னேற வைக்கும்.

பரிகாரம்:
காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீதிருவிருந்தவல்லி சமேத ஸ்ரீதிருஊரகப்பெருமாளை புதன்கிழமைகளில் சென்று வணங்குங்கள். சுமை தூக்கும் தொழிலாளிக்கு உதவுங்கள். முயற்சிகள் பலிதமாகும்.


சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


சிம்மம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

போற்றுதல், தூற்றுதல் இரண்டையும் ஒன்றாகவே எண்ணும் நீங்கள், யாருக்காகவும் உங்களின் கொள்கைகளை மாற்றிக்கொள்ளாதவர். முன் வைத்த காலைப் பின் வைக்காத நீங்கள் திடீர் முடிவுகளை எடுத்து எதிரிகளை திக்குமுக்காடச் செய்வீர்கள்.
உங்களின் ராசிக்கு சுகஸ்தானமான 4 - ம் வீட்டில் அமர்ந்து கொண்டு வீண் விரயத்தையும், ஏமாற்றங்களையும் தந்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்வதால் நீங்கள் புதிய பாதையில் பயணிப்பீர்கள்.

வாழ்வில் எதிர்பாராத அதிரடி மாற்றங்கள் உண்டாகும். குடும்பத்தின் அடிப்படை வசதி, வாய்ப்புகள் உயரும். கல்யாணம், காது குத்து நிகழ்ச்சி என வீடு களைகட்டும். கணவன், மனைவிக்குள் அன்யோன்யம் பிறக்கும். மகளின் திருமணத்தை கோலாகலமாக நடத்துவீர்கள். மகனுக்கும் நல்ல இடத்தில் மணப்பெண் அமையும்.

குழந்தை இல்லாதவர்களுக்குக் குழந்தை பாக்கியம் உண்டாகும். பூர்வீக சொத்தில் உங்களின் பங்கு கைக்கு வரும். தாய்வழி உறவினர்கள் உங்களைப் புரிந்துகொள்வார்கள். சொந்தமாக இடம் வாங்கும் யோகம் உண்டாகும். குலதெய்வக் கோயிலுக்குச் செய்யவேண்டிய நேர்த்திக்கடனை இப்போது நிறைவேற்றுவீர்கள்.

வேலைக்கு விண்ணப்பித்துக் காத்திருந்தவர்களுக்கு நல்ல நிறுவனத்திலிருந்து அழைப்பு வரும். மனைவிவழி உறவினர்கள் மதிப்பார்கள். அதிக வட்டிக்கு வாங்கியிருந்த கடனைத் தந்து முடிப்பீர்கள். நட்புவட்டத்தால் பலனடைவீர்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
உங்களின் ராசிக்கு 9 - ம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் இலக்கை நோக்கி முன்னேறுவீர்கள். பாகப்பிரிவினை சுமுகமாக முடியும். கோயில் கும்பாபிஷேகத்தைத் தலைமையேற்று நடத்துவீர்கள். சொந்த ஊரில் இழந்த செல்வாக்கை மீண்டும் பெறுவீர்கள். பதினோறாம் வீட்டை குரு பார்ப்பதால் உங்களின் புகழ், கௌரவம் கூடும். புதிய பதவிக்கு உங்களின் பெயர் பரிந்துரை செய்யப்படும்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குருபகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் மகம் நட்சத்திரக்காரர்கள் உணர்ச்சிவசப்படாமல் செயல்படுவது நல்லது. எதிர்மறை எண்ணங்களுக்கு இடம் கொடுக்காதீர்கள்.
உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. பூரம், உத்திரம் 1 - ம் பாதம் நட்சத்திரக்காரர்களுக்கு ஓரளவு நற்பலன்கள் உண்டாகும்.

1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்கள் ஜீவனாதிபதியான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பூரம் நட்சத்திரக்காரர்களுக்கு வேலைச்சுமை அதிகரிக்கும். குடும்பத்தினரைப் பற்றி யாரிடமும் குறைத்துப் பேச வேண்டாம். மகம், உத்திரம் நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு முயற்சிகள் பலிதமாகும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்களின் ராசிநாதன் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் அமர்வதால் உடல்நலனில் கவனமாக இருப்பது நல்லது. அரசு வகை காரியங்களில் கவனமாக இருங்கள்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 6 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகள் அதிகமாகும். பழைய கடனை அடைக்க புதிய வழி பிறக்கும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் பொது விழாக்கள், சுப நிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
அரசால் அனுகூலம் உண்டு. நீண்ட நாளாக எதிர்பார்த்துக் காத்திருந்த அயல்நாட்டுப் பயணம் சாதகமாக அமையும். வீடு கட்ட ப்ளான் அப்ரூவலாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்துவீர்கள். வெளிவட்டாரத்தில் செல்வாக்கு உயரும். அதிகாரிகளின் நட்பு கிடைக்கும்.

31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் பிரபலங்களின் உதவியுடன் தள்ளிப்போன காரியங்களை விரைந்து முடிப்பீர்கள். இல்லத்தில் திருமணம் கூடி வரும். வாகனத்தைச் சீர்செய்வீர்கள். அழகு, ஆரோக்கியம் கூடும்.

வியாபாரத்தில் இரட்டிப்பு லாபம் உண்டு. இங்கிதமாகவும், இதமாகவும் பேசி வாடிக்கையாளர்களைக் கவருவீர்கள். சிலர் புது தொழில் அல்லது புது கிளைகள் தொடங்குவீர்கள். மெடிக்கல், வாகனம், கல்விக் கூடங்கள், கமிஷன் வகைகளால் லாபமடைவீர்கள். உங்களின் ரசனைக்கேற்ப கடையை விரிவுபடுத்துவீர்கள். சிலர் சொந்த இடத்துக்கு மாற்றுவீர்கள்.

பெண்கள் உயர்கல்வியில் வெற்றிபெறுவார்கள். தோஷங்களால் தடைப்பட்ட கல்யாணம் நல்லவிதத்தில் முடியும். நினைத்ததைச் சாதிப்பீர்கள். எதிர்பார்த்த நிறுவனத்தில் அதிக சம்பளத்துடன் புதிய வேலை அமையும்.

மாணவ மாணவிகளின் நினைவாற்றல், அறிவாற்றல் கூடும். அனைத்துப் பாடங்களிலும் அதிக மதிப்பெண்கள் குவிப்பார்கள். ஆசிரியர்கள் பக்கபலமாக இருப்பார்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. விரும்பிய படிப்பில் சேருவீர்கள்.

கலைத்துறையினர் புகழடைவார்கள். சிலருக்கு விருது கிடைக்கும். உதாசினப் படுத்திய நிறுவனமே உங்களை அழைத்துப் பேசும். சம்பள பாக்கி கைக்கு வரும். உங்களின் படைப்புத் திறன் அதிகரிக்கும்.
இந்த குரு மாற்றம் தொட்டதெல்லாம் துலங்க வைப்பதுடன், எதிர்பாராத திடீர் யோகங்களையும் அள்ளித்தரும்.

பரிகாரம்: கரூர் மாவட்டம், பாளையம் எனும் ஊரில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீகமலவல்லித் தாயார் சமேத ஸ்ரீகதிர் நரசிங்கப் பெருமாளை சனிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். கட்டடத் தொழிலாளிக்கு உதவுங்கள். சாதித்துக் காட்டுவீர்கள்.


கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


கடகம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

தொலைதூரச் சிந்தனையுடைய நீங்கள், நாளை நமதே என்ற நம்பிக்கையுடன் எதையும் செய்பவர். தானுண்டு தன் வேலையுண்டு என்றிருக்கும் நீங்கள், எதிரிகளையும் சிந்திக்கவைக்கும் செயல்திறன் கொண்டவர்கள்.

உங்களின் ராசிக்கு 5 - ம் வீட்டில் அமர்ந்து உங்களின் வருங்கால திட்டங்களை நிறைவேற்றிய குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 6 - ம் வீட்டில் மறைகிறார். சகட குரு சங்கடங்கள் தருவாரோ என கலங்கவேண்டாம். குரு பகவான் ஆட்சிபெற்று அமர்வதால் நல்லதே நடக்கும்.

வாழ்க்கையின் சூட்சுமங்களைக் கற்றுக் கொள்வீர்கள். மற்றவர்களை நம்பி இருக்காமல் தன் முயற்சியால் என்ன முடிகிறதோ அதைச் செய்து முன்னேறுவீர்கள். எவ்வளவு பணம் வந்தாலும் சேமிக்க முடியாதபடி செலவுகள் இருக்கும்.

கணவன் மனைவி பரஸ்பரம் விட்டுக் கொடுத்துப் போவது நல்லது. சிலர் பூர்வீக சொத்தை விற்றுவிட்டு நகரத்தை ஒட்டியுள்ள புறநகர் பகுதியில் குடியேறுவார்கள். புது வாகனம் வாங்குவீர்கள். உதவி செய்கிறேன் என்று சொல்லியிருந்தவர்கள் உங்களுக்கு உதவாமல் போகக்கூடும். எனவே மாற்றுவழியை யோசித்து வையுங்கள்.
நீங்கள் சிரித்தால் உலகமும் சிரிக்கும், நீங்கள் கோபப்பட்டால் உலகமும் கோபப்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். முன்கோபத்தால் நல்லவர்களின் நட்பை இழக்காமல் பார்த்துக் கொள்ளுங்கள்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குரு பகவான் குடும்ப ஸ்தானத்தைப் பார்ப்பதால் பணவரவு உண்டு. குடும்பத்தில் நிம்மதி உண்டு. அடுத்தடுத்து சுபநிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும். பெரிய மனிதர்களின் நட்பு கிடைக்கும். பழைய நகையை மாற்றி புது டிசைனில் ஆபரணம் வாங்குவீர்கள். வாகனத்தைச் சீர் செய்வீர்கள். மகளுக்குத் திருமணம் நிச்சயமாகும். மகனின் அலட்சியப் போக்கு மாறும்.

குரு 10 - ம் வீட்டைப் பார்ப்பதால் புதிய இடத்தில் வேலை கிடைக்கும். தன்னம்பிக்கையுடன் பொது காரியங்களில் ஈடுபடுவீர்கள். கடினமான வேலைகளையும் எளிதாக முடிக்கும் சக்தி கிடைக்கும். பழைய சிக்கலில் ஒன்று தீரும்.

குரு 12 - ம் வீட்டைப் பார்ப்பதால் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னின்று நடத்துவீர்கள். சுபசெலவுகள் அதிகரிக்கும். வெளியூர் பயணங்களால் புத்துணர்ச்சி பெறுவீர்கள். நீண்ட நாள்களாகப் போக நினைத்த புண்ணியஸ்தலங்களுக்குச் சென்று வருவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை உள்ள காலகட்டங்களில் குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூலம் நட்சத்திரத்தில் செல்வதால் இக்காலக்கட்டத்தில் திட்டமிட்ட காரியங்கள் கைகூடும். புதிய முதலீடுகள் செய்து சொந்தமாகத் தொழில் தொடங்குவீர்கள். அயல்நாட்டிலிருக்கும் உறவினர், நண்பர்களால் ஆதாயமடைவீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் சுகஸ்தானாதிபதியும் லாபாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால் இக்காலக்கட்டத்தில் தாயாரின் உடல்நிலை சீராகும். தாய்வழிச் சொத்துகள் கைக்கு வரும். புகழ் பெற்றவர்கள் நண்பர்களாவார்கள். மூத்த சகோதர வகையில் ஆதரவுப் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமணம், சீமந்தம் போன்ற சுபநிகழ்ச்சிகளாலும், விருந்தினர்களின் வருகையாலும் வீடு களைகட்டும்.
6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் உங்கள் தனாதிபதி சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதத்தில் செல்வதால் எதிர்பார்த்த வகையில் பணவரவு உண்டு. இங்கிதமாகப் பேசி முக்கிய காரியங்களை முடிப்பீர்கள்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 7 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் உங்களுடைய திறமைகள் வெளிப்படும். தள்ளிப்போன அரசு வகை காரியங்கள் விரைந்து முடியும். நட்புவட்டம் விரிவடையும்.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.7.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசாங்கத்தாலும், அதிகாரப் பதவியில் இருப்பவர்களாலும் ஆதாயம் உண்டு. வீடு கட்ட அரசாங்க அனுமதி கிடைக்கும். பொது விழாக்கள், சுபநிகழ்ச்சிகளில் முதல் மரியாதை கிடைக்கும்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால், இந்த கால கட்டத்தில் வீண் அலைச்சல், தர்ம சங்கடமான சூழ்நிலைகள் உருவாகும். முன்னெச்சரிக்கையானிருப்பது நல்லது.

வியாபாரத்தில் அதிரடி மாற்றங்கள் செய்து லாபம் ஈட்டுவீர்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பார்கள். தொழில் போட்டிகள் அதிகமாகும். பழைய நிறுவனங்களைக் காட்டிலும் புதிய நிறுவனங்களின் பொருட்களை விற்பதன் மூலமாக அதிக ஆதாயமடைவீர்கள். சிமெண்ட், கணினி உதிரி பாகங்கள், ரியல் எஸ்டேட் வகைகளால் லாபமடைவீர்கள்.

உத்தியோகத்தில் சக ஊழியர்களின் விடுமுறையால் வேலைச்சுமை அதிகமாகும். பதவி உயர்வு தாமதப்படும். புது உத்தியோக வாய்ப்புகள் வந்தாலும் பொறுத்திருந்து செயல்படுவது நல்லது.

பெண்கள் உயர் கல்வியில் சாதிப்பார்கள். பழைய நண்பர்கள் தேடி வந்து பேசுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த கருத்துமோதல் நீங்கும். வெளிமாநிலத்தில் வேலை கிடைக்கும்.

மாணவ, மாணவிகள் யோகா, தியானம் செய்து நினைவாற்றலை அதிகப்படுத்துங்கள். உயர்கல்வியில் விளையாட்டுத்தனம் வேண்டாம். நுழைவுத்தேர்வு, போட்டித் தேர்வுக்கு முழுநேரம் ஒதுக்கி தயார்படுத்திக் கொள்ளுங்கள்.

கலைத்துறையினர் தங்களுக்கு வரவேண்டிய சம்பள பாக்கியைப் போராடி பெறுவார்கள். மூத்த கலைஞர்களிடம் சில நுணுக்கங்களைக் கற்றுத் தெளிவீர்கள்.
இந்த குரு மாற்றம் செலவுகள், அலைச்சல்களைத் தந்தாலும் வெற்றியையும் தரும்.

பரிகாரம்: ஈரோடு மாவட்டம், கோபிச்செட்டிபாளையம் அருகேயுள்ள பாரியூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீகெண்டத்து காளியம்மனை வெள்ளிக்கிழமைகளில் சென்று வணங்குங்கள். விபத்துக்குள்ளானவர்களுக்கு உதவுங்கள். மகிழ்ச்சி தங்கும்.


மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்


மிதுனம் - குரு பெயர்ச்சிப் பலன்கள்

எதிலும் புதுமையைப் புகுத்துபவர்களில் வல்லவர்களான நீங்கள், பொது உடைமைச் சிந்தனை அதிகம் உள்ளவர். நிறைகுறைகளை அலசி ஆராய்ந்து மற்றவர்களைத் துல்லியமாக கணிக்கும் நீங்கள் சிரமப்படுபவர்களை கைதூக்கியும் விடுவீர்கள்.
இதுவரை ஆறாம் வீட்டில் அமர்ந்து பல கஷ்ட, நஷ்டங்களைத் தந்து, உங்களைத் திணறடித்த குரு பகவான் 29.10.2019 முதல் 13.11.2020 வரை ராசிக்கு 7 - ம் வீட்டில் அமர்ந்து உங்களின் ராசியை நேருக்கு நேராகப் பார்க்க இருப்பதால், எதிலும் உங்கள் கை ஓங்கும். வாழ்க்கையின் நெளிவு, சுளிவுகளைக் கற்றுக்கொள்வீர்கள்.

வீண் சண்டை, விவாதங்களிலிருந்து ஒதுங்குவீர்கள். உங்களிடம் மறைந்து கிடந்த திறமைகளை வெளிப்படுத்த நல்ல வாய்ப்புகள் வரும். குடும்பத்தில் சந்தோஷம் பெருகும். திருமணம், சீமந்தம், கிரகப் பிரவேசம், காதுகுத்து போன்ற சுப நிகழ்ச்சிகளால் வீடு களைகட்டும்.

பிரிந்திருந்தவர்கள் ஒன்று சேருவீர்கள். கணவன், மனைவிக்குள் நெருக்கம் அதிகரிக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உங்கள் வார்த்தைக்கு மதிப்பு கூடும். திருமணம் தள்ளிப்போனவர்களுக்குக் கூடி வரும். சமூகத்தில் பெரிய அந்தஸ்தில் இருப்பவர்களின் நட்பு கிடைக்கும்.

விலை உயர்ந்த தங்க ஆபரணங்கள் வாங்குவீர்கள். எதிர்பார்த்திருந்த தொகை கைக்கு வரும். சிலர் வங்கிக் கடன் உதவி கிடைத்து புது வீடு கட்டி குடிபுகுவார்கள். அரசாங்க விஷயங்கள் நல்லவிதத்தில் முடிவடையும். மனைவி உங்களுடைய புது முயற்சிகளுக்குப் பக்கபலமாக இருப்பார்.

அவரின் ஆரோக்கியம் சீராகும். மனைவிவழி உறவினர்களுடன் இருந்த மோதல்களும் விலகும். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். அவருக்கும் எதிர்பார்த்த குடும்பத்திலிருந்த நல்ல பெண் அமைவார். இளைய சகோதரர் வகையில் மகிழ்ச்சி தங்கும். புது பதவிக்கு உங்களுடைய பெயர் பரீசலிக்கப்படும்.

குருபகவானின் பார்வைப் பலன்கள்:
குருபகவான் உங்களின் லாப வீட்டைப் பார்ப்பதால் பெரிய திட்டங்கள் தீட்டுவீர்கள். ஷேர் மார்க்கெட் மூலமாக பணம் வரும். வெளிமாநில புண்ணிய ஸ்தலங்கள் சென்று வருவீர்கள். அயல்நாடு செல்லும் வாய்ப்பு வரும். நவீன ரக வாகனம் வாங்குவீர்கள்.

குருபகவானின் நட்சத்திர சஞ்சாரம்:
29.10.2019 முதல் 31.12.2019 வரை குரு பகவான் கேதுவின் நட்சத்திரமான மூல நட்சத்திரத்தில் செல்வதால், இக்காலக்கட்டத்தில் பழுதான வாகனத்தை மாற்றுவீர்கள்.
1.1.2020 முதல் 5.3.2020 வரை மற்றும் 31.7.2020 முதல் 18.10.2020 வரை உங்களின் விரயாதிபதியும் பூர்வ புண்ணியாதிபதியுமான சுக்கிரனின் பூராடம் நட்சத்திரத்தில் குரு பகவான் செல்வதால், பேச்சில் கனிவு பிறக்கும். குழந்தைபாக்கியம் கிடைக்கும்.
மகளுக்கு நல்ல வரன் அமையும். திடீர் பயணங்களால் உற்சாகம் அடைவீர்கள். வேற்றுமதத்தைச் சார்ந்தவர்கள் உதவுவார்கள். பெற்றோருடன் இருந்து வந்த மனஸ்தாபங்கள் நீங்கும். சிலர் வீடு மாறுவீர்கள். விலை உயர்ந்த ஆபரணங்கள் வாங்குவீர்கள்.

6.3.2020 முதல் 27.3.2020 வரை மற்றும் 19.10.2020 முதல் 13.11.2020 வரை குரு பகவான் சூரியனின் நட்சத்திரமான உத்திராடம் 1 - ம் பாதமான தனுசு ராசியில் செல்வதால் நெருக்கடிகளைச் சமாளிக்கும் சக்தி உண்டாகும். தைரியம் கூடும். அரசு காரியங்கள் விரைந்து முடிவடையும்.

மகரத்தில் குரு பகவான்:
28.03.2020 முதல் 6.7.2020 வரை குரு பகவான் உங்கள் ராசிக்கு 8 - ம் வீடான மகர ராசியில் அதிசாரமாகியும், வக்கிரமாகியும் அமர்வதால் எதிர்ப்புகளையும் தாண்டி முன்னேறுவீர்கள். எதிலும் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குரு பகவானின் வக்கிர சஞ்சாரம்:
7.07.2020 முதல் 30.7.2020 வரை உள்ள காலகட்டத்தில் உத்திராடம் 1 - ம் பாதம் தனுசு ராசியில் குரு வக்கிரமடைவதால் அரசு வகை காரியங்கள் இழுபறியாகும்.
31.7.2020 முதல் 10.09.2020 வரை பூராடம் நட்சத்திரத்தில் குரு வக்கிர கதியில் செல்வதால் வெளியூர் பயணங்களில் கவனமுடன் சென்று வருவது நல்லது. ஓரளவு பணவரவு உண்டு. முன்னேற்றம் தடைப்படாது.

வியாபாரத்தில் புதிய முதலீடுகளை இப்போது துணிந்து செய்யலாம். இனி சில சூட்சுமங்களையும், ரகசியங்களையும் தெரிந்துகொண்டு அதற்கேற்ப லாபம் ஈட்டுவீர்கள். வாடிக்கையாளர்களின் ரசனையைப் புரிந்து கொள்வீர்கள். அயல்நாட்டிலிருப்பவர்களும் உதவுவார்கள். ஏற்றுமதி, இறக்குமதி, பதிப்பகம், கட்டட உதிரிப் பாகங்கள், அரிசி மண்டி வகைகளால் நல்ல லாபம் கிடைக்கும்.

உத்தியோகத்தில் புதிய உற்சாகம் பிறக்கும். உங்களின் தனித்தன்மை வெளிப்படும். அதிகாரிகளுடன் அரவணைத்துப் போகும் மனப்பக்குவம் உண்டாகும். அவர்களின் மனநிலையை அறிந்து அதற்கேற்ப செயல்படத் தொடங்குவீர்கள். எதிர்பார்த்த பதவி உயர்வு, சம்பள உயர்வு தாமதமின்றி கிடைக்கும். சிலர் உத்தியோகம் சம்பந்தமாக அயல்நாடு சென்று வருவார்கள்.

பெண்கள் கூடுதலாக ஒரு புதிய மொழியைக் கற்றுக் கொள்வார்கள். புதிய இடத்தில் வேலை கிடைக்கும். உயர்கல்வி, மேற்படிப்பு தொடர விரும்புபவர்களுக்கு எதிர்பார்த்த கல்வி நிறுவனத்தில் சேர கடிதம் வரும். கல்யாணப் பேச்சுவார்த்தைகள் சுமுகமாக முடியும்.

மாணவ மாணவிகளுக்கு அவர்களின் எண்ணங்கள் பூர்த்தியாகும். வகுப்பறையில் அமைதி காப்பதுடன், படிப்பில் ஆர்வம் காட்டுவீர்கள். ஆசிரியர் மற்றும் பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். விளையாட்டில் பரிசு பெறுவீர்கள்.

கலைத்துறையினருக்கு எதிர்பார்த்துக் காத்திருந்த வாய்ப்பு இப்போது கூடி வரும். வருமானம் உயரும். பிரபல கலைஞர்களின் நட்பால் சாதிப்பீர்கள்.
இந்த குரு மாற்றம் வாடியிருந்த உங்களை வளமைப்படுத்துவதுடன், வருங்காலத் திட்டங்களையும் நிறைவேற்றுவதாக அமையும்.

பரிகாரம்: காஞ்சிபுரம் மாவட்டம், திருமலைவையாவூரில் அருள்பாலிக்கும் ஸ்ரீஅலர்மேலுமங்கை சமேத ஸ்ரீபிரசன்னவெங்கடேசரை ஏகாதசி திதி நடைபெறும் நாளில் சென்று வணங்குங்கள். பழைய கல்வி நிறுவனத்தைப் புதுப்பிக்க உதவுங்கள். நல்ல பலன்கள் கூடுதலாகக் கிடைக்கும்.