Monday, 1 February 2016

சந்திர யோகம் - கிரகங்களின் சேர்க்கை

சந்திர யோகம் - கிரகங்களின் சேர்க்கை

சந்திரனுடன் மற்றொரு கிரகம் சேர்ந்திருந்தால் ஏற்படக்கூடிய பலன்கள் குறித்துப் பார்ப்போம்.

சந்திரன்- சூரியன்:

சந்திரனுடன் சூரியன் சேர்ந்திருப்பது பித்ரு தோஷத்தைக் குறிப்பதாகும். அயல் தேசங்களுக்குப் போய் பணம் சம்பாதிக்கக்கூடிய வாய்ப்பு உண்டாகும். எவ்வளவுதான் சம்பாதித்தாலும், செலவு செய்வதற்கு மிகவும் யோசிப்பார்கள். விளையாட்டுப் போட்டிகளில் ஆர்வம் இருக்கும். அலட்சிய மனப்பான்மையுடன் நடந்துகொள்ளும் இவர்கள், பெற்றோரிடம் அதிக பாசம் செலுத்த மாட்டார்கள். இவர்கள் துவர்ப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பி உண்பர்.

சந்திரன்- செவ்வாய்:

சந்திரனுடன் செவ்வாய் சேர்ந்திருப்பது, சந்திர மங்கள யோகம் எனப்படும். இவர்கள் மிகுந்த தைரியசாலிகளாக இருப்பர். பூமி, வாகனம் வாங்கி விற்பதன் மூலமும், மருத்துவம், மருத்துவ உபகரணங்கள் மூலமும் பணம் சம்பாதிப்பர். கடல்சார்ந்த பொருட்களாலும் இவர்களுக்கு லாபம் கிடைக்கும். பெரும்பாலும் இவருக்குச் சகோதரிகள் இருக்க மாட்டார்கள். இவர்கள் கசப்புச் சுவை கொண்ட உணவுகளை விரும்பிப் புசிப்பர்.

சந்திரன்- புதன்: 

சிறந்த அறிவாளிகள். ஜோதிடம், வானியல் ஆராய்ச்சி, கணக்கு தணிக்கைத் துறை, கல்வித் துறை போன்றவற்றில் இவர்களுடைய ஜீவனம் அமையும். சிலர் ஆன்மிகம் தொடர்பான துறைகளில் உயர்பொறுப்பு வகிப்பர். இவர்களுக்கு பெரும்பாலும் தாய்மாமன் உறவுமுறையிலேயே திருமணம் நடக்கும். தாய்மாமன் வகையில் ஆதாயம் உண்டு. இவர்களுக்குப் பெண் குழந்தைகள் மட்டுமே பிறக்கக்கூடும்.

சந்திரன்- குரு:

சந்திரனுடன் குரு சேர்ந்திருப்பது, குரு சந்திர யோகம் ஆகும். பொன், நவரத்தினங்கள் போன்றவற்றில் ஆதாயம் கிடைக்கும். எதிர்பாராத வகையில் பணவரவு இருக்கும். ஆன்மிகத்தில் புகழுடன் திகழ்வர். இவரைச் சுற்றி இருப்பவர்கள் இவர்களுக்கு உதவிகரமாகவே இருப்பர். இவர்களுக்குப் பெரும்பாலும் ஆண் குழந்தைகளே பிறக்கும். கோயில் கட்டுதல்,  பொதுநலப் பணிகள் போன்றவற்றில் ஆர்வத்துடன் ஈடுபடுவர்.

சந்திரன்- சுக்ரன்:

பாட்டு, நடனம், ஓவியம், நடிப்பு போன்ற கலைகளில் தேர்ச்சியும் ரசனையும் பெற்றிருப்பர். தான் இருக்கும் இடத்தைச் சுத்தமாகவும் கலைநயத்துடனும் வைத்திருப்பர். தெய்விக ஈடுபாடு அதிகம் இருக்கும். அம்மனை வழிபடும் இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. பங்களா, சொகுசு கார் என்று வசதியாக வாழ்வர். குழந்தை பாக்கியம் இல்லையென்றே சொல்லலாம். ஒருசிலருக்கு பெண் குழந்தைகளைத் தத்தெடுத்து வளர்க்கும் வாய்ப்பு உண்டு. இனிப்பு இவர்களுக்கு மிகவும் பிடிக்கும்.

சந்திரன்- சனி:

உழைப்பாளிகள். இரும்பு சம்பந்தமான பொருட்களின் மூலம் பணம் சம்பாதிப்பர். எத்தனை வசதிகள் இருந்தாலும் அனுபவிக்க முடியாதபடி சுற்றிக்கொண்டே இருப்பர். குடும்ப நலனுக்காகவே எப்போதும் பாடுபடுவர். அதிக காரமான உணவு வகைகளையே விரும்பிச் சாப்பிடுவர்.

சந்திரன்- ராகு:

இந்த ஜாதகர் ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் மாமனார், மாமியார் வகையில் தொல்லைகள் தொடர்ந்து ஏற்படும். கணவன்- மனைவிக்குள் அவ்வப்போது பிரச்னைகள் இருந்துகொண்டே இருக்கும். இவர்களால் எந்த வேலையிலும் நிரந்தரமாக இருக்க முடியாது. அடிக்கடி பணி மாறிக்கொண்டே இருப்பர். தலைவலி, வயிற்றுவலி போன்ற பிரச்னைகள் ஏற்படும். உடன்பிறப்பு வகையிலும் பிரச்னைகள்தான். ஜாதகத்தில் சந்திரன்- ராகு சேர்க்கை பெற்றவர்கள், உரிய பரிகாரங்களைச் செய்துகொள்வதன் மூலமே பிரச்னைகளில் இருந்து விடுபடமுடியும்.

சந்திரன்- கேது:

இவர்கள் அறிவுத் திறன் கொண்டவர்களாக இருந்தாலும், அதைச் சரியானபடி பயன்படுத்த மாட்டார்கள். இவர்களைப் புரிந்துகொள்வது கடினம். யாரிடமும் அதிகம் பேசமாட்டார்கள். இவர்களுக்கு வாக்குப் பலிதம் உண்டு. ஏதேனும் பொருள் காணாமல் போனால், அதுபற்றிய விவரங்களைச் சொல்லக்கூடிய ஆற்றல் இவர்களுக்கு உண்டு. இவர்களுக்கு எல்லாவிதமான மந்திரங்களும் ஸித்தியாகும்.

கல்வி ஜோதிடம்

கல்வி ஜோதிடம்

இன்றைய காலகட்டத்தில் ஒருவருக்கு தன்னுடைய ஜீவனத்தித்ற்கு , சுக போக எதிர்கால வாழ்விற்கு, சமூகத்தில் மதிப்புடன் வாழ மற்றும் நல்ல குணநலன்களை பெற்று வாழ்கையில் திருப்புமுனையாக அமைத்து கொடுப்பது இந்த கல்வி ஆகும். எனவே தற்போது இதற்கு முக்கியத்துவம் கொடுத்து தங்களுடைய குழந்தைகளை முன்னணியில் உள்ள கல்வி நிறுவனத்தில் பல லட்சம் செலவழித்து படிக்க வைக்கின்றனர்.

ஆனால் இதெல்லாம் எதற்கு? தன் குழந்தைகளை DOCTOR, ENGGINEER, PROFESSIONAL மற்றும் இதர துறைகளில் படித்தவுடன் CAMPUS INTERVIEW ல் வேலை கிடைக்கவேண்டும் என்றா நோக்கத்தில் தான். ஆனால் இதெல்லாம் நடக்கிறதா? பலருக்கு தோல்வி ஏற்படுகிறது இதற்கு காரணம் பல உண்டு அவற்றில் ஒன்று ஜாதகத்தை ஆராயாமல் ஜாதகரின் திறமைகளை அறியாமல் செய்யப்படும் முடிவும் ஒன்று ஆகும்.

எனவே PRE KG சேர்க்கும் முதலே குழந்தைகளின் ஜாதகத்தினை ஆராய்ந்து அவர்களின் திறமைகளை கண்டறிந்து அவர்களை ஊக்குவிப்பது, நல்ல நாள் பார்த்து ஆரம்ப கல்வியை கல்வி நிறுவனத்தில் ஆரம்பிப்பது, இதெல்லாம் கணக்கில் கொண்டு பெற்றோர்கள் செயல் படும் போது குழந்தைகள் படிப்பில் சிறந்து விளங்க வாய்ப்புகள் ஏற்படுகிறது

அதற்கு ஜாதகத்தில் ஆராயவேண்டியவைகள் :

• 2 மிடம் ஜாதகரின் ஆரம்ப கல்வியை குறிக்கிறது

• 4 மிடம் பட்டப்படிப்பையும்

• 8 மிடம் தொழில் நுணுக்கக் கல்வியையும்

• 9 மிடம் உயர் கல்வி – PG COURSE

• 12 மிடம் ஆராய்ச்சி கல்வி

• 5 மிடம் திறமை,புத்திசாலித்தனம், ஞாபக சக்தி ஆகியவை குறிக்கும்

• மேலும் கல்வி காரகன் புதனின் நிலை, மனோ காரகன் சந்திரனையும், மூளை காரகன் குருவையும் ஆராய்ந்து பலன் உரைக்க வேண்டும்

• புதன் நீசமாக கூடாது. அந்த நீசா புதனை பாவ கிரகத்தின் பார்வை இருக்க கூடாது. 2ல் நீசக்கிரகம் இருக்ககூடாது

• புதன் நீசமானாலும் சில கிரக அமைப்பினால் கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் உதாரணம் : மீனத்தில் புதன் நீசமடைந்து அங்கு குரு பகவான் ஆட்சி பெறும் போது நீசபங்கம் ஆகி புதன் பலம் பெற்று கல்வியை அளித்து விடுவார்.

• புதன் 2 மிடத்தில் இருப்பது கல்வியை ஏற்படுத்தி கொடுத்து விடும் என்பது விதி. புதனுடன் சூரியன் அல்லது குரு சேர்ந்து இருந்தால் நல்ல கல்வியை ஏற்படுத்தி விடும். ஆனால் தீய கிரகங்கள் தொடர்பு கல்வியை கெடுத்து விடும் அல்லது தடங்கல்களை ஏற்படுத்திவிடும்.

• எந்த லக்கனமாக இருந்தாலும் புதன் கன்னியில் இருந்தால் கல்வியில் உயர்வு உண்டு ஆனால் பாவக சக்கரத்தில் மாறாமல் இருந்து பரலின் எண்ணிக்கை 24 க்கு குறையாமல் இருந்து பாவ கிரகத்தின் தொடர்ப்பு இல்லாமல் இருக்கவேண்டும்

• பாவகர்த்தாரி தோஷத்தில் புதன் இருக்ககூடாது

• காரகன் பலமாக இருந்தாலும் காரகத்தின் வீடுகள் கெட்டுவிடக்கூடாது.
எனவே இவற்றை எல்லாம் கணக்கில் கொண்டு ஜாதகரின் கல்வி நிலையை ஆராய்ந்து தேர்ந்தெடுக்கும் கல்வி நல்ல சிறப்பையும் அதற்கு உண்டான உத்தியோகம் / தொழிலை ஏற்படுத்தி கொடுத்து அவர்கள் வாழ்க்கை சுமை இல்லாமல் சுமூகமாக சிறக்க வழிவகை செய்யும்

நீங்களே திருமண பொருத்தம் பார்க்கலாம்!

நீங்களே திருமண பொருத்தம் பார்க்கலாம்!

திருமணப் பொருத்தம் எப்படி பார்ப்பது   என்று இரத்தின சுருக்கமாகப் பார்க்க விருக்கிறோம்.

பத்துப் பொருத்தம் பார்த்தும் –  சில மணங்கள் முறிந்து போய்விடுகின்றன . பொருத்தம் பார்க்காமல் மணந்தவர்கள்  கூட , மனம் ஒருமித்து வாழ்வதால் , வெற்றிகரமான தாம்பத்ய வாழ்வு வாழ்கின்றனர்.  பூர்வ புண்ணியம் பலமாக இருந்தால் , இறை அருள் என்றும் துணை நிற்கும். விதிப் படி நடக்கட்டும் என்று விட்டு விட்டால் , நல்லதோ , கெட்டதோ எது நடந்தாலும் ஏற்றுக் கொள்ளவேண்டியது தானே.

வீட்டில் முதல் திருமணம் பொருத்தம் பார்க்காமல் செய்துவிட்டு, ஏதோ காரணத்தால் – மண முறிவு ஏற்பட்டு விட்டால், அடுத்த திருமணம் அவ்வாறு செய்ய துணிவு வராது. பொருத்தமில்லா ஜாதகமாக இருந்ததும் ஒரு காரணமோ? என்று நொந்து போகின்றனர்.

என் அனுபவத்தில், ஜாதகம் உண்மையோ , பொய்யோ – ஆனால் இவர் தான் மனைவி / கணவன் என்று அமைவது இருக்கிறதே, அது நிச்சயம் ஜென்மாந்திர தொடர்பு தான். திருமணம் ஆனா அன்பர்களுக்கு இது புரியும் என நினைக்கிறேன்.

அதே போல் , தான் குழந்தை பிறப்பும். கணவன் , மனைவி கையில் மட்டும் இல்லாத ஒரு விஷயம் . திருமணம் முடிந்து , உடனே / ஒரு வருடத்துக்குள் குழந்தை பிறந்து இருந்தால் , அவர்களுக்கு இந்த உண்மை தெரியாது. ஒரு ஆறு மாதம், ஒரு வருடத்திற்கு பிறகு கரு உருவாகி இருந்தால், அவர்களுக்கு இது புரியும்.

திருமணப் பொருத்தம் என்பது, கணவன் மனைவியாக இணையும் இருவருக்கும் நிலையான மன ஒற்றுமை, மகிழ்ச்சி, இன்பமான தாம்பத்திய உறவு, பிள்ளைப் பேறு, சுபிட்சமான  எதிர்காலம் என்பன அமையுமா? என இருவருடைய ஜாதகங்களின் உள்ள கிரகங்களின் ஆதிக்கத்தைக் (நிலைகளைக்) கொண்டு கணித்து அறிதல் .

விவாகப் பொருத்தம் பார்க்கும் பொழுது மணமகன், மணமகள் ஆகிய இருவருடைய ஜாதகங்களிலும், பிறந்த நட்சத்திரங்களை வைத்து 10-பொருத்தங்களும், ஜாதக-கிரக நிலையை கொண்டு கிரக-தோஷங்களும் பார்த்து விவாகம் முடிவு செய்யப்படுகின்றது.

இன்பமான குடும்ப வாழ்க்கைக்கு; மனப் பொருத்தம், புரிந்துணர்வு, அன்பு , பெருந்தன்மை, பரஸ்பர நம்பிக்கை, பிள்ளைப் பேறு, மகிழ்ச்சியான சிற்றின்ப வாழ்க்கை, அதிர்ஷ்டம்  ஆகியன அடிப்படைத் தேவைகளாகும். இவற்றுடன் மாரக தோஷம் அற்றவர்களாகவும் அமையப் பெற்றவர்களின் குடும்ப வாழ்க்கை ஆயுட் காலம் வரை மகிழ்ச்சியாக இருக்கும் என்பது அனுபவ உண்மை.

எனவே திருமணத்திற்கு மன பொருத்தமும், ஜாதகப் பொருத்தமும் மிக முக்கியமானதாகும். கிரகப் பொருத்தம் இல்லாத மன பொருத்தம் தற்காலிகமானது. காலப் போக்கில் கிரகநிலை மற்றங்களினால் மனம் மாற்றமடைந்து குழப்பங்கள் ஏற்படலாம். ஆதலினால், நீடித்த மகிழ்ச்சியான தி்ருமண வாழ்க்கையை உறுதி செய்வதற்கு ” ஜாதகப்  பொருத்தம்” மிக கட்டாயமாகின்றது.

முக்கியமான பத்துப் பொருத்தங்களாவன:

1. நட்சத்திரப்-பொருத்தம்,
2. கணப்-பொருத்தம்,
3. மகேந்திரப்-பொருத்தம்,
4. ஸ்திரி தீர்க்க-பொருத்தம்,
5. யோனிப்-பொருத்தம்,
6. ராசிப்-பொருத்தம்,
7. ராசி அதிபதிப்-பொருத்தம்,
8. வஸ்யப்-பொருத்தம்,
9. ரச்சுப்-பொருத்தம்,
10. வேதைப்-பொருத்தம்
என்பனவாம்.

1.  நட்சத்திரப்-பொருத்தம்: (ஆயுள் ஆரோக்கிய விருத்தி)
இதனை தினப்பொருத்தம் என்றும் சொல்வார்கள். இந்தப் பொருத்தம் ஆண் பெண் இருபாலாருடைய ஆயுளையும் ஆரோக்கியத்தையும் நிர்ணயிக்கக் கூடியது.
பெண்ணின் நட்சத்திரம் முதல் புருஷன் நட்சத்திரம் 2, 4, 6, 8, 9, 11, 13, 15, 18, 20, 24, 26 ஆக வரின் உத்தமம். இந்த அமைப்பில்  இல்லாதிருந்தால் பொருத்தம் இல்லை.

ஜன்ம நட்சத்திரம் முதல்:
10வது நட்சத்திரம் கர்ம நட்சத்திரம்
7-வது நட்சத்திரம் வதம்
19-வது நட்சத்திரம் அனு ஜென்மம்
22-வது நட்சத்திரத்தின் 4ம் பதம் வைநாசியம்
27-வது நட்சத்திரம் மருத்யு நட்சத்திரம்
27-வது நட்சத்திரம் வேறு ராசி எனில்  நீக்கவும், ஒரே ராசியாகில் உத்தமம்

ரோகினி, திருவாதிரை, மகம், விசாகம், திருவோணம், ஹஸ்தம், உத்திரட்டாதி, ரேவதி ஆகிய 8 நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் உத்தமம்.

பூரம், உத்திரம், சித்திரை, புனர்பூசம், பூசம், அஸ்வினி, கார்த்திகை, பூராடம், உத்திராடம், மிருகசீர்ஷம், அனுஷம் ஆகிய 11 நட்சத்திரங்களும் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் மத்திமம்.

ஒரே ராசியாக இருந்தால் புருஷ நட்சத்திர பாதம் முந்தி இருந்தால் உத்தமம்.
மற்றைய நட்சத்திரங்கள் ஏக நட்சத்திரங்களாக இருந்தால் பொருத்தம் இல்லை. விலக்கப் படவேண்டும்.

ஸ்திரீ நட்சத்திரத்தில் இருந்து 7வது நட்சத்திரமாக புருஷ நட்சத்திரம் வரின், வதம் என்றும், புருஷ நட்சத்திரத்தில் இருந்து 22வது நட்சத்திரமாக ஸ்திரீ நட்சத்திரம் வரின், வைநாசிகம் என்றும் சொல்லப்படும். இந்த வதம், வைநாசிகம் ஆகிய இரண்டும் ஒதுக்கப்பட வேண்டும்.

ஆனால்; திருவாதிரைக்கு – உத்திரமும், பூரத்திற்கு – அனுஷமும்; பூசத்திற்கு – சித்திரையும்; புனர்பூசத்திற்கு – ஹஸ்தமும்; பூரட்டாதிக்கு – ரோகினியும் வதம்; வைநாசிகமானால் சுபம். கெடுதல் இல்லை.

உத்தராடத்திற்கு – ரேவதியும்; மூலத்திற்கு -பூரட்டாதியும்; பரணிக்கு – பூசமுமானால் வதம்-வைநாசிக தோஷம் இல்லை.

ஏக-ராசியில் பெண் நட்சத்திரம் முந்தியது விரும்பத்தக்கதல்ல. ஏக-ராசியிலும் பரணி, அவிட்டம், பூசம் இவை புருஷ நட்சத்திரங்களாக வந்து பெண் நட்சத்திரத்திற்கு முந்தியதானாலும் விலக்கப்பட வேண்டியவை.

சதயம், அசுவினி, ஹஸ்தம், ஸ்வாதி, கிருத்திகை,பூராடம், ரோகினி, மகம் இந்த 8ம் ஏக ராசிகளாகில் ஸ்திரீ முன்வந்தால் செய்யலாம்.

2.  கணப்பொருத்தம்: (மங்களம்)
இப்பொருத்தம் சரியாக இருந்தால் தம்பதிகள் சுப பலன்களை அடைந்து சுகமாக வாழ்வார்கள். தம்பதியின் வாழ்க்கையில் நிலையான மகிழ்ச்சி ஏற்படுத்துவது இப்பொருத்தமே யாகும்.
இதை; குணப்பொருத்தம் என்றும் அழைப்பார்கள். பரந்த மனப்பான்மை, உயர்ந்த லட்சியங்கள், நன்னடத்தை, நல்ல குணங்கள் கொண்டவர்களை தேவகணம் என்றும்; சாதாரணமான குணமும், புத்தியும், லட்சியங்களும், நோக்கங்களும் உடையவர்களை மனுஷகணம் என்றும்; முரட்டு குணமும், மட்டமான எண்ணங்களும் கொண்டவ்ர்களை  ராட்சத கணம் என்றும் மூன்று கணங்களாக பிரிக்கப்ப்ட்டுள்ளது.

ஸ்திரீ, புருஷருக்கு ஒரே கணமாக இருந்தால் பொருத்தம் உண்டு. ஸ்திரீ மனுஷ கணமும் புருஷர் தேவ கணமுமாய் இருந்தால் பொருந்தும்.

ஸ்திரீ தேவ கணமும் புருஷர் மனுஷ கணமுமாய் இருந்தால் பொருந்தும். ராக்ஷஸ கணத்திற்கு மனுஷகணமும், தேவ கணமும் பொருந்தாது.
(நட்சத்திரங்களும் அவற்றிற்கான கண விபரங்களையும் பஞ்சாங்கத்தில் பார்க்கவும்)

3.  மகேந்திரப் பொருத்தம்: (சம்பத்து விருத்தி)
இப்பொருத்தம் இருந்தால் புத்திரவிருத்தி உண்டாகும். மக்கட் செல்வங்களை உண்டாக்கி, அவர்கள் மேன்மையாக வாழ்கின்ற யோகத்தை உண்டாக்குவதே, இந்த மகேந்திரப் பொருத்தமாகும்.
பெண் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 4, 7, 10, 13, 16, 19, 22, 25 ஆக வரின் பொருந்தும். சம்பத்து கொடுக்கும்.

4.  ஸ்திரீ தீர்க்கம்: (சகல சம்பத் விருத்தி)
இதன் மூலம் திருமகள் கடாட்சமும், சுபீட்சமும் நீடிக்கும். ஸ்திரீதீர்க்கப் பொருத்தமிருந்தால் சகலவிதமான சம்பத்துகளும் விருத்தியாகும்.
பெண்ணின் நட்சத்திரம் முதல் ஆண் நட்சத்திரம் வரை எண்ணினால் 13 நட்சத்திரங்களுக்குக் கீழாக ஆண் நட்சத்திரம் இருந்தால் பொருந்தாது. 13க்கு மேல் இருந்தால் உத்தமம். 9-க்கு மேல் 13 வரை மத்திமம். 9 வரை (7க்கு மேல் இருந்தால் பொருந்தும் என்று அபிப்பிராயம் தெரிவிப்பாரும் உளர்.)

5.  யோனிப் பொருத்தம்: (தம்பதிகளின் அன்யோன்ய நட்பு – மகிழ்ச்சியான சிற்றின்ப உறவு)
இது, ஆண் பெண் ஆகிய இருவருடைய உடலமைப்புகளும் ஒன்றுக் கொன்று பொருத்தமாகவும், உடல் உறவு கொள்வதற்கு ஏற்றவையாகவும் அமைவதற்கு ஆதாரமாகும்.
இருவருக்கும் ஒரு யோனியாயினும், பகையில்லாத யோனிகளாகில்  ஆண் யோனி ஆணுக்கும் பெண் யோனி பெண்ணுக்குமாயினும், இருவருக்கும் பெண் யோனியாயினும் உத்தமம். இருவருக்கும் பகையில்லாத ஆண் யோனியாயின் மத்திமம். ஆணுக்கு பெண் யோனியும் பெண்ணுக்கு ஆண் யோனியுமாயினும் ஒன்றிற் கொன்று பகையோனி யாயினும் பொருந்தாது.

ஒன்றிற்கொன்று பகை யோனிகள்:
குதிரை – எருமை; யானை – சிங்கம்; குரங்கு – ஆடு; பாம்பு – கீரி; மான் – நாய்; எலி – பூனை; மாடு – புலி; பெருச்சாளி – பூனை.

6.  ராசிப் பொருத்தம்: (வம்ச விருத்தி)
இந்த இராசிப் பொருத்தம் இருந்தால் தான் வம்சம் விருத்தியாகும்.
பெண்ணும் புருஷனும் ஒரு ராசியாயினும்; பெண் ராசிக்கு புருஷன் ராசி 6-க்கு மேற்படினும் உத்தமம்.
பெண் ராசிக்கு புருஷன் ராசி 2-ஆயின் மிருத்து; 3-ஆயின் துக்கம்; 4-ஆயின் தரித்திரம்; 5-ஆயின் வைதவ்வியம்; 6-ஆயின் புத்திர நாசம். ரிஷபம்  முதலான இரட்டை ராசிகளில் பிறந்த பெண்ணுக்கு 6-ம் ராசி புருஷ ராசியாக வரினும் மத்திமமான பொருத்தத்தை கொடுக்கும்.

பெண்ணும் புருஷனும் ஒரே ராசியாகும் போது பெண் நட்சத்திரத்திற்கு புருஷ நட்சத்திரம் பிந்தியதாகிற் பொருந்தாது.

7.  ராசி அதிபதிப்-பொருத்தம்: (சந்ததி விருத்தி)
இராசியாதிபதிப் பொருத்தம் இருந்தால் தான் குடும்பம் சுபீட்சமாக வாழமுடியும். இப் பொருத்தம் இருந்தால் தம்பதிகளிடயே ந்ல்ல ஒற்றுமையும் சந்தோஷமான வாழ்க்கையும் அமையும. பொருத்தம் மத்திமமாயின் அவ்வப்போது சிறிய கருத்து வேறுபாடுகள் வந்து போகும். புத்திரர்கள் யோகமாக வாழ்வார்கள்.
இருவர் இராசிகளும் ஒருவராயினும்; ஒருவருக்கொருவர் மித்துருக்களாயினும் உத்தமம். மித்துருக்கள் அல்லாதவை சத்துருக்கள் – பொருந்தாது.

யார் யாருக்கு நண்பர்கள்..?

8.  வஸ்யப்-பொருத்தம்: (அன்யோன்ய வசியம் – இணைபிரியா அன்பு)
கணவன் மனைவி இருவரும் ஒருவரை ஒருவர் சமமாக விரும்பி, அன்பின் பிணைப்பிலும் அணைப்பிலும் இனைந்து இரண்டறக் கலக்கும் தன்மையை அடைவதற்கு இந்த வசியப் பொருத்தம் சிறப்பாக அமைந்திருக்க வேண்டும். பெண்ராசிக்கு புருஷ ராசி வசியமானால் உத்தமம். புருஷ ராசிக்கு பெண் ராசி வசியமானால் மத்திமம். வசியமில்லாதது பொருந்தாது. இதுவும் ஒரு முக்கியமான பொருத்தம்.
பெண் ராசி :  ஆண் ராசி
மேஷம்  : சிம்மம் , விருச்சிகம்
ரிஷபம் :  கடகம், துலாம்
மிதுனம் :  கன்னி
கடகம் :  விருட்சிகம், தனுசு
சிம்மம் :  மகரம்
கன்னி :  ரிஷபம், மீனம்
துலாம் : மகரம்
விருச்சிகம் :  கடகம், கன்னி
தனுசு : மீனம்
மகரம்  : கும்பம்
கும்பம்  : மீனம்
மீனம்  : மகரம்

9.  ரச்சுப் பொருத்தம்: (தீர்க்க சுமங்கலியாய் இருப்பது) ரச்சுப் பொருத்தம் மிக முக்கியமானது.
கணவனாக நிச்சயம் செய்பவரின் ஆயுள் நிலையை உறுதிப் படுத்துவதற்கு இந்தப் பொருத்தம் பார்ப்பது மிகவும் அவசியமானதாகும். ஏனென்றால், பெண்ணின் மாங்கல்ய பாக்கியத்தை இந்தப் பொருத்தத்தை ஆராய்து பார்த்துத்தான் நிச்சயிக்க வேண்டியுள்ளது.

சிரோ ரச்சு (சிர்ச்சு): மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம்
கண்ட ரச்சு (கழுத்து): ரோகினி, திருவாதிரை, அஸ்தம், சுவாதி, திருவோணம், சதயம்
நாபி ரச்சு (உதரம்) :  கிருத்திகை , புனர்பூசம், உத்திரம், விசாகம், உத்திராடம், பூரட்டாதி
ஊரு ரச்சு (துடை) பரணி, பூசம், பூரம், அனுஷம், பூராடம், உத்திரட்டாதி
பாத ரச்சு (பாதம்): அஸ்வினி, ஆயில்யம்,  மகம், கேட்டை, மூலம், ரேவதி

ஸ்த்ரீ, புருஷ நட்சத்திரங்கள் ஒரே ரச்சுவாக இல்லாமல் இருப்பது உத்தமம்.

ஒரே இரச்சுவானால்: பொருந்தாது.

சிரோ ரச்சு: புருஷன் மரணம்
கண்ட ரச்சு: பெண் மரணம்
நாபி ரச்சு: புத்திர தோஷம்
ஊரு ரச்சு: பண நஷ்டம்
பாத ரச்சு: பிரயாணத்தில் தீமை

10.  வேதைப்-பொருத்தம் (இடையூறு அற்ற இன்ப வாழ்க்கை)
தம்பதியின் வாழ்க்கையில் ஏற்படக்கூடிய துன்பங்களையும் துக்கங்களையும் முன்னதாகவே அறிந்து அவற்றை விலகச் செய்து, அவர்களை இன்பமாக வாழவைக்கும் சக்தியுடையது இந்த வேதைப் பொருத்தமாகும்.
வேதை என்றால் ஒன்றிற்கொன்று தாக்குதல் என்று பொருள். எனவே வேதையில் இருக்கும் நட்சத்திரங்கள் பொருந்தாது மாறி இருப்பின் பொருத்தம் உண்டு. ஸ்திரி புருஷருடைய நட்சத்திரங்கள் கீழே குறித்தவாறு ஒன்றிற்கொன்று வேதையாய் இருப்பின் பொருந்தாது.

அஸ்வினி – கேட்டை
பரணி – அனுஷம்
கார்த்திகை – விசாகம்
ரோகினி – சுவாதி
திருவாதிரை – திருவோணம்
புனர்பூசம் – உத்திராடம்
பூசம் – பூராடம்
ஆயிலியம் – மூலம்
மகம் – ரேவதி
பூரம் – உத்தராட்டாதி
உத்திரம் – பூரட்டாதி
அஸ்தம் – சதயம்
மிருகசீரிடம், சித்திரை, அவிட்டம் ஒன்றிற்கொன்று வேதை

இந்த 10-பொருத்தங்களையும், ஜாதகங்களின் கிரக நிலைகளையும் கவனத்தில் கொண்டு விவாஹ பொருத்தம் தீர்மானிக்கப்படல் வேண்டும்.

பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய

பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய

* ஜோதிட ரீதியாக ஒரு பெண்ணிற்கு அமையக்கூடிய கணவரைப் பற்றி அறிய, அவளின் ஜென்ம லக்னத்திற்கு 7ம் வீடும், 7ம் அதிபதியும், 7ம் வீட்டில் அமையும் கிரங்களும் பலமாக அமைந்திருத்தல் அவசியம்.

* நவக்கிரகங்களில் நவநாயகனாக விளங்குபவர் சூரியனாவார். ஒரு பெண்ணின் ஜாதகத்தில் சூரியன் 7ம் வீட்டில் அமையப் பெற்றால், வரக்கூடியவர் முன்கோபக்காரராகவும், நெஞ்சழுத்தம் உள்ளவராகவும், இரக்கக்குணம் இல்லாதவராகவும் இருப்பார். இவரை அனுசரித்துச் செல்வது என்பது சற்று கடினமான காரியமே.

* 7ம் வீட்டில் வளர்பிறை சந்திரன் இருந்தால் அமைகின்ற கணவர் அழகானவராகவும், தேய் சந்திரன் இருந்தால் வசதி வாய்ப்பில் சற்று குறைந்தவராகவும், குழப்பவாதியாகவும் இருப்பார்.

* 7ம் வீடு செவ்வாயின் வீடாக இருந்தாலும், 7ம் வீட்டில் செவ்வாய் அமைந்திருந்தாலும் முன் கோபம் கொண்டவராகவும், அதிகார குணம் உடையவராகவும் இருப்பார்.

* 7ம் வீட்டில் புதன் அமைந்திருந்தாலும், 7ம் வீடு புதனின் வீடாக இருந்தாலும், கணவர் நல்ல அறிவாளியாகவும் வியாபார நோக்கம் உடையவராகவும் இருப்பார்.

* பெண்ணின் ஜாதகத்தில் 7ம் வீடு குருவின் வீடாக இருந்தாலும் 7ம் வீட்டில் குரு அமைந்திருந்தாலும் கணவர் நல்ல வசதி வாய்ப்புடையவராகவும், பெயர் புகழ் பெற்றவராகவும், எல்லோரையும் அனுசரித்துச் செல்பவராகவும் இருப்பார்.

* 7ல் சுக்கிரன் இருந்தாலும் 7ம் வீடு சுக்கிரனின் வீடாக இருந்தாலும் நல்ல செல்வம் செல்வாக்குடன், நல்ல உடலமைப்பு, சர்வலட்சணம் பொருத்திய உடலமைப்பு, சுகபோக வாழ்க்கை வாழும் யோகம், கலை, இசை போன்றவற்றில் ஆர்வம் உடையவராகவும் இருப்பார்.

* 7ல் சனி இருந்தாலும் 7ம் வீடு சனியின் வீடாக இருந்தாலும், கறுப்பு நிறமுடையவராகவும், இளைத்த தேகம் கொண்டவராகவும், உரத்த குரலில் பேசுபவராகவும் இருப்பார்.

* 7ல் சர்ப கிரகங்களான ராகு, கேது அமைந்திருந்தால் கணவர் நல்ல நடத்தை உள்ளவராக இருக்கமாட்டார். குறிப்பாக 7ல் சூரியன், ராகு இருந்தால், பல பெண்களின் தொடர்பும் அதன் மூலம் எல்லாவற்றையும் இழக்கக்கூடிய நிலையும் உண்டாகும்.